பிரான்சில் ஆர்ஜொந்தை தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக தமிழ் இளையோர்களின் உணவுதவிர்ப்புப் போராட்டம்!

460 0

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இனவாத அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் தியாக தீபத்தின் ஐந்தாம் நாளான இன்று 19.09.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் ஆர்ஜொந்தை தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் அடையாள உணவு மறுப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி பாக்கியநாதன் லக்சாயினி அவர்கள் ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை கொலம் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி சுதேசனா ரவிமோகன் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து ஏனைய இளையோர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் அந்தோனி ரூசெல் அவர்களும் மலர்வணக்கம் செலுத்தி நினைவுரையாற்றியிருந்தார்.
அவர்தனது உரையில் எமது போராட்டங்களில் தான் தொடர்ச்சியாகக் கலந்துவருவதாகவும் இன்று இந்த இளையோர்களின் போராட்டத்தைப் பார்க்கும்போது,நிச்சயம் தமிழீழம் உருவாகும் என்ற நம்பிக்கை தனக்கு உருவாகியிருப்பதாகவும் ஏனைய நாடுகளின் விடுதலைப் போராட்டத்தை எமது போராட்டத்தோடு ஒப்பிட்டு நோக்கியதுடன், தொடர்ச்சியாகப் போராடுவதன் மூலம் ஈழத்தை விரைவில் எட்டமுடியும் எனவும் தெரிவித்தார்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களும் இளையோர்களின் உணவுமறுப்புப் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்று பல விடயங்களையும் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து பிரான்சு இளையோர் அமைப்பினர் உணவு மறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நிந்துலன், செல்வன் திவாகர் ஆகியோர் இளையோர்கள் மத்தியில் தியாக தீபம் திலீபன் அவர்கள் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்குழு கலைஞர்கள் எழுச்சி கானங்களைப் பாடியிருந்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சுரேஸ் அவர்களும் இளையோர்கள் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டம் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து மாலை 19.30 மணி வரை உணவு மறுப்புப் போர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் நன்றியுரைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்தைத் தொடர்ந்து, கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டு உணவுமறுப்புப் போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் கடும் மழை குறுக்கிட்டபோதும், இளையோர்கள் விறுவிறுப்பாகத் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 19.30 மணிவரை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ஜொந்தை தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக 12 மணிநேரம் குறித்த அடையாள உண்ணா விரதம் இடம்பெறவுள்ளது.

குறித்த இருநாள் உண்ணாவிரத நிகழ்வில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினருடன் ஆர்ஜொந்தை, கொலம், சேர்ஜி, கிளிச்சி, செவ்றோன், செல் மற்றும் ஸ்ரார்ஸ்பேர்க் ஆகிய பகுதிகளின் இளையோர் அமைப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)