அமீரகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்: குடும்ப விழாக்கள், இறுதி சடங்குகளில் பங்கேற்க விதிமுறைகள் வெளியீடு

238 0

அமீரகத்தில் குடும்ப விழாக்கள் மற்றும் இறுதி சடங்கில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அமீரக சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய அவசரம், நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் முக்கியமான குடும்ப விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக குடும்ப விழாக்களில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை தவிர பிற உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடும்ப விழாக்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 10 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்கு முன் கொரோனா தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ‘பபே’ எனப்படும் கையில் தட்டுடன் உணவு வகைகளின் இடத்திற்கு விழாவில் பங்கேற்பாளர்கள் வரிசையாக செல்லும் முறைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

விழாக்களில் ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள் மற்றும் கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். விழா நடைபெறும் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்து இருக்க வேண்டும். உடல் நலக்குறைவு உடையவர்கள், முதியவர்கள் பொது விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம். அதேபோல் ஒருவர் இறந்துவிட்டால் இறுதி சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை 10 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

புதைப்பதற்கு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்க வேண்டும். இறுதி சடங்கு நடைபெறும் கல்லறை பகுதிக்கு சுகாதார அமைச்சகம் அல்லது பேரிடர் மேலாண்மை குழுவில் ஒரு அதிகாரி கட்டாயம் மேற்பார்வையிட வேண்டும். முகக்கவசத்துடன் இறந்தவரை அடக்கம் செய்யும் முன்னும், பின்னும் தரமான கிருமி நாசினி மருந்து மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.