நவாஸ் ஷெரீப்புக்கு கைது வாரண்ட் பிறப்பித்த பாக். அரசு

203 0

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

70 வயதான நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது ஜாமீன் முடிந்து அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிலையில் நவாஷ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில், பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரீப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பியபின், லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக சுமார் 8 வாரங்களுக்கு நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஜாமீன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் நவாஷ் ஷெரீப் சரணடையாமல் இருக்கிறார்.