கரோனாவுக்கு உலகம் முழுவதும் 1000 செவிலியர் உயிரிழப்பு

222 0

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக 1000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச செவிலியர் அமைப்பு கூறும்போது, “ உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு 1000 செவிலியர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளது. கரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளதாக செவிலியருக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.