கலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்

1681 0

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பினால் கடந்த ஆறு மாதங்களாகத் தமிழாலயங்களின் செயற்பாடுகள் முடங்கியிருந்த நிலையில் 12.09.2020 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்துக்கான கலைத்திறன் போட்டி திட்டமிட்டவாறு 09.30 மணிக்கு Arnsberg நகரில் ஆரம்பித்தது.

Arnsberg நகர சபையின் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மண்டபம், அரங்கு மற்றும் உணவகம் போன்றவற்றின் சிறப்பான கட்டமைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் போட்டிகள் நடைபெற்றன. எதிர்பார்ப்புக்கும் மேலாக காலை 7.00 மணிக்கே தூர இடங்களிலிருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை அவர்களின் நிர்வாகி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அழைத்து வந்து தமது கலைமேலுள்ள ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்கள்.

10.00 மணிக்கு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டியில் கும்மி, காவடி கரகம், பொய்க்காற் குதிரை, பரதம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், வாய்ப்பாட்டு, விடுதலைப் பாடல் போன்ற பேட்டிகள்; நடைபெற்று சிறந்த முதல் மூன்று போட்டியாளர்களும் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான வெற்றிப்பட்டி வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் 12.00 மணிவரை நிறைவுபெற்ற போட்டிகளுக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டு, அவர்கள் வெளியேறிய பின்னர் 14.00 மணிக்கு மிகுதிப் போட்டிகள் ஆரம்பித்து 18.00 மணிக்கு நிறைவு பெற்றன. நிகழ்வுகளில் 350க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்து வரும் 5 வாரங்களும் தொடர்ச்சியாகத் தமிழ்த்திறன் இறுதிப்போட்டி, 30வது அகவை நிறைவு விழாக்கள் போன்றவை நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.