கொரோனா வைரஸ் பாதித்த செல் படங்கள் – விஞ்ஞானிகள் வெளியிட்டனர்

253 0

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த செல் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், மனித சமூகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மனிதர்களின் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்சினையை உருவாக்குகிறது.

உலகமே இந்த தொற்றால் அல்லாடிக்கொண்டிருக்கிற சூழலில் இந்த வைரஸ் பற்றி ஆராய்ந்து, அதனால் பாதிக்கப்பட்டுள்ள செல் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த காமில் எஹ்ரே உள்ளிட்ட விஞ்ஞானிகள்தான் கொரோனா வைரஸ் தொற்று, எப்படி செல்களை தீவிரமாக பாதிக்கின்றது என்பதை காட்டும் படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மைக்ராஸ்கோப் கருவி கொண்டு பெரிதாக்கி காட்டப்பட்டுள்ள செல் படங்கள், மனிதர்களின் சுவாச மேற்பரப்பில் ஏராளமான நுண்ணிய துகள்களை காட்டுகின்றன. அவை தொற்றை பிற திசுக்களுக்கும், மற்ற மனிதர்களுக்கும் பரப்ப தயார் நிலையில் உள்ளன.

இந்த ஆராய்ச்சியின்போது விஞ்ஞானிகள், கொரோனா வைரசை நுரையீரல்களில் உள்ள எபிடெலியல் செல்களில் செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் 96 மணி நேரம் கழித்து உயர் ஆற்றல் கொண்ட ஸ்கேனிங் எலெக்டிரான் மைக்ராஸ்கோப் மூலம் பார்த்து இருக்கிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல் படங்களை ‘நியு இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட செல் படத்தில் காணப்படுகிற வைரஸ் துகள்கள், பாதிக்கப்பட்ட கொரோனா செல்கள் மூலம் சுவாச மேற்பரப்பில் வெளியாகும் வைரசின் முழுமையான தொற்று வடிவம் என்று விஞ்ஞானிகள் விளக்கி உள்ளனர்.

விஞ்ஞானிகள் கூற்றுப்பபடி, பெரிய வைரஸ் சுமை என்பது பாதிக்கப்பட்ட நபரின் பல உறுப்புகளுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கான ஒரு மூலம் ஆகும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நபர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்பதை இந்த படங்கள் காட்டுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.