கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டு வாசலை அதிகாரிகள் இரும்பு தகடுகளால் அடைத்தனர்.
குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டு வாசலை அதிகாரிகள் இரும்பு தகடுகளால் அடைத்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியதால் நகராட்சி அதிகாரிகள் தகரத்தை அகற்றினர்.
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர், அவர் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அந்த குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியை இரும்பு தகடுகள் அமைத்து தடுப்புகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு வசிக்கும் இதர குடியிருப்புவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவரின் வீட்டின் வாசலை மட்டும் அடைத்து சென்றார்கள்.
அங்குள்ள ஊழியர்களிடம் தடுப்புகள் அமைக்க வேண்டாம் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தும், வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாத வகையில் அடைத்து விட்டார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, அந்த வீட்டில் தடுப்புகளால் அடைக்கப்பட்ட இரும்பு தகரத்தை உடனே அகற்றினர். கொரோனா சிகிச்சை பெற்ற அந்த வீட்டின் நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலம் முடிவதற்கு முன்பே, வெளியில் நடமாடுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்ததால் வீட்டு வாசலை தகடு வைத்து அடைத்ததாகவும், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கித்தர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

