கிளிநொச்சியில் வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு – மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

234 0

கிளிநொச்சி பொதுச்சந்தையில் சில வியாபார நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள 38 வியாபார நிலையங்களுக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மரக்கறி வியாபாரிகள் இன்றைய தினம் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி சந்தையில் உள்ள மரக்கறி  வியாபாரிகள் 48 பேருக்கும்,   கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரினால் நேற்றுப் பிற்பகல் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெறும் கூட்டத்திற்கு,  முற்பகல் 11 மணியளவிலேயே திடீரென அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் 38 வியாபாரிகளுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது போனதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ளாத 38 வியாபாரிகளின் வர்த்தக நிலையங்களுக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி  உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  ச.பிரபாகரன்,  வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் வியாபார நிலையங்களை திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்

அத்துடன்,  குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, வியாபாரிகள்  தமது போராட்டத்தை கைவிட்டு தமது வியாரபார நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.