ஆப்பிரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த 16 தமிழர்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் உதவி செய்தனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இந்த வகையில் ஆப்பிரிக்காவில் இருந்து 16 தமிழர்கள் கடந்த 21-ந்தேதி டெல்லிக்கு வந்து சேர்ந்தனர். டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு டிராவல் ஏஜென்சியை அவர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த ஏஜென்சி நிறுவனம் அவர்களை ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கையில் பணம் இல்லாமல் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தமிழக அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உதவி செய்தனர். அவர்களுக்கான ரெயில் கட்டணம், உணவு வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஹிதேஸ்குமார் மக்வானா தலைமையில் அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

