ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

273 0

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை கொண்டாடினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்று பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.