கொரோனாவை மறந்து எமது குழந்தைகளை பலிகொடுக்கமுடியாது!

266 0

தேர்தல் காரணமாக மக்கள் கொரோனாவை மறந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் கொரோனா எம்மை விட்டு முற்றாக நீங்கவில்லை. எனவே கொரோனாவை மறந்து எமது குழந்தைகளை பலிகொடுக்கமுடியாது. குழந்ழைகளை கவனமாக பராமரிக்கவேண்டும்.

இவ்வாறு முன்பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தக்கூட்டமொன்றில் உரையாற்றிய காரைதீவுப்பிரதேச சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் ஜ.எல்.மொகமட் லாபீர் தெரிவித்தார்.

காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் அதன் பணிப்பாளர் வி.ரி;.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு குடும்பலநல உத்தியோகத்தர் திருமதி எஸ்.அமிர்தானந்தன் பிரதேசசெயக முன்பள்ளி உத்தியோகத்தர் எம்.ஜே.ஜஸ்மின் ஆகியோரும் விளக்கமளித்தனர்.

அங்கு லாபீர் மேலும் விளக்கமளிக்கையில்:

முன்பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. திறக்கப்படும்பட்சத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.

கைழுவுதல் முகக்கவசமணிதல் சமுகஇடைவெளிபேணல் என்பன கட்டாயம் பின்பற்றப்படவேண்டும். வகுப்பறை மற்றும் சூழல் சுத்தமாயிருக்கவேண்டும். கொண்டுவரும் உணவுகளை பகிர்ந்துண்ணலைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

பாடசாலைக்குள் பெற்றோரோ வெளியாரோ வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். கொரோனா தடுப்பதில் குறிப்பாக குழந்தைகளுக்கு வராமல் தடுப்பதனால் பெற்றோர்களின் பங்களிப்பு கூடுதலாகவிருக்கிறது. ஏனெனில் பாடசாலையை விட அதிகநேரம் குழந்தைகள் பெற்றோரிடம்தான் இருக்கும். ஆனால் அவர்கள் பக்குவமடையாதவர்கள். எனவே அவர்களது பராமரிப்பில்தான் கிருமித்தொற்றைத் தவிர்க்கலாம். அவர்களது சீருடை தொடக்கம் பாதணி வரையும் தினமும் சுத்தப்படுத்திக் கவனிக்கவேண்டும்.என்றார்.