சசிகலாவின் உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் கட்சி பேதமின்றி தமிழராக கூடி குரல் கொடுப்போம்.

441 0

தம்மை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ளும் சிறிலங்கா நாட்டிலே ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை(05.08.2020) நடைபெற்று முடிந்தது.

அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெண்ணாக சசிகலா ரவிராஜ் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிசார்பாக போட்டியிட்டார். இவர் 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜ் அவர்களின் துணைவியாராவார். ரவிராஜ் அவர்கள் சட்டவாளராக தனது பணியை ஆரம்பித்து, 2001 தொடக்கம் 2006 வரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலே சிறிலங்காவின் புலனாய்வுப்பிரிவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்காத பட்சத்தில் இவரது துணைவியார் நடந்து முடிந்த 2020 க்கான தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு, அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்ய படக்கூடிய தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று 2ஆம் இடத்தில் இருந்த போதிலும், திட்டமிட்ட சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கமைய அவர்களின் கைக்கூலியாளரான சுமந்திரனை கொண்டுவருவதற்காக வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டு 4ஆம் இடத்தில் இருந்த சுமந்திரனை 2ஆம் இடத்திற்கு திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.”கூட்டமைப்பு சொல்வதைக் கேட்க வில்லையென்றால் மாமாவை சுட்டது போல் அம்மாவையும் சுட்டு விடுவார்கள்” என்று அவரது மகள் மற்றம் உறவுப் பெண் கூறி அழுத காட்சிகள் சாட்சிகளாக உள்ள போதிலும், நீதி என்பது தமிழருக்கு மறுக்கப்பட்டதாகவே உள்ளது.

வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கான சுதந்திரம், உரிமை பாதுகாப்பு, ஜனநாயகம் என்பன மறுக்கப்பட்டே வருகிறது.
அந்த வகையில் கணவணை பறிகொடுத்து மன உறுதியுடன் இத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறும் நிலையில் இருந்த சசிகலா ரவிராஜ் அவர்களின் வெற்றி திட்டமிட்டு இராஜபக்ச சகோதரர்களால் பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் கட்சி பேதமின்றி தமிழராக கூடி குரல் கொடுப்போம்.

தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி