யுத்தத்தை நடாத்தி இருக்க வேண்டியவர்கள் மலையகத் தமிழ் மக்களே

271 0

இலங்கையில் மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமது உரிமைகளைக் கோரி உள்நாட்டு யுத்தம் ஒன்றை நடாத்தியவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களே. அதே நேரம் நூறாண்டு காலத்திற்கு மேலாக இந்த நாட்டை வளப்படுத்திய மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களே தமது உரிமைக்காக யுத்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் அஹிம்சை வழியிலேயே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காணி உரிமையை வென்றெடுக்க எப்போதும் நான் இணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தொட்டை பிரதேச சபைக்கு உட்பட்ட கபரகல தோட்டத்தில் இரத்தொட்டைப் பிரதேச சபை உறுப்பினர் பிலிப் , உக்குவல பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்புகள் இடம்பெற்றன. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மாத்தளை மாவட்ட வேட்பாளர் ரோஹிணி கவிரத்ன உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையகப் பகுதிகளில் அமைக்கப்படும் வீடுகள் நுவரெலிய மாவட்ட தமிழ் மக்களுக்கு மட்டும்தானா என அப்போது அதற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த பழநி திகாம்பரத்திடம் நான் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கேள்வி எழுப்பி இருந்தேன். அதே நேரம் அவர் மாத்தளை மாவட்டத்திற்கு வீடுகளை ஒதுக்கீடு செய்தபோது நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை. ஆனாலும் மாத்தளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதி மக்கள் அனைவருக்கும் வீடமைப்பு காணியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன்.

காணியை வழங்கினால் வீடுகளை அமைக்கும் இயலுமை உள்ளவர்கள் தாங்களாகவே அதனை அமைத்துக்கொள்ள முடியும். இந்த மலையகத் தமிழ் மக்களே தமது காணி உரிமைக்காக யுத்தம் செய்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யாது அஹிம்சாவழியில் ஜனநாயக வழியில் போராடி வருகிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்து அவர்களது காணி உரிமையை வென்றெடுக்க அவர்களோடு இணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.