ஐ.எஸ்.அமைப்புடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு- சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு

286 0

ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரியொருவர் தொடர்பினை பேணிவந்துள்ளார் என சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையாகியிருந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து விசாரணை செய்யும்  அதிகாரியொருவரே  இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த அதிகாரி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மேலும் கூறியுள்ளதாவது, “சிரேஸ்ட முஸ்லிம் அரச அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டனர்.

மேலும் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் மகனும் மருமகனும் ஹகாபி அமைப்புடன் இணைந்தது குறித்து விசாரணைகளின் போது எமக்கு அறிய கிடைத்தது.

இதேவேளை கேரளாவை சேர்ந்த  அநேகமான இளைஞர்கள் ஐ.எஸ்.அமைப்புடன் இணைவதற்காக ஆப்கான் சென்றனர். இவர்களில் அதிகளவானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாவனல்லயில் புத்தரின் சிலையை சேதப்படுத்திய சாதிக் அப்துல் ஹக் என்பவர் 2014இல் சிரியா சென்று இஸ்லாமிய கோட்பாடு குறித்து கற்றுள்ளமையும் விசாரணைகளின்போது எமக்கு அறியக்கிடைத்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.