கண்டி பெரஹரவை இலக்கு வைத்த பயங்கரவாதிகள் – வெளிவந்த புதிய தகவல்!

256 0

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹரவை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டம் தீட்டயிருந்ததாக அரச புலனாய்வு சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விசாரணைகளுக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றிய அரச புலனாய்வு சேவை அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்போதே குறித்த அதிகாரி இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறுக், சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு பாரியளவு அரசியல் ரீதியான ஒத்துழைப்புகளை வழங்கியதாகவும் குறித்த அதிகாரி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்பட்டதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக குறிப்பிட்ட அதிகாரி, தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட நவ்பர் மௌலவி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.