தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 444

269 0

தமிழகத்தில் வேறு காரணங்களுக்காக மரணித்தவர்கள் என சொல்லப்பட்ட 444 உயிரிழப்புகள் கொரோனாவால் உயிரிழந்ததாக சேர்க்கப்பட்டது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது.  ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.   திறப்பு விழாவின் போது அமைச்சர்கள், மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக 2ஆவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தர ஒரே நேரத்தில் 7 பேரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை பிரித்தெடுக்க முடியும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை எடுக்க குறைந்தது 40 நிமிடங்கள் வரை ஆகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் விடுபட்ட மரணங்கள் குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் வேறு காரணங்களுக்காக 444 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவர் வடிவேல் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

மார்ச் 1 முதல் ஜுன் 10 வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444ஆக கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆதலால் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 மரணங்கள் சேர்க்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.   மேலும் அவர் கூறுகையில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.