வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

260 0

வாக்களிப்பு நிலையத்தில் வாக்களார் குமிழ் முனைப்பேனா எடுத்துவரவேண்டும் என்பதோடு தனது அடையாள அட்டையை தனது கையிலேயே வைத்து அதிகாரிக்கு உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் உதவி ஆணையாளர் ரீ. ஹென்ஸ்மேன் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழு அமர்வு திங்கட்கிழமை (20.07.2020) மட்டக்களப்பு ஆனந்தசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், எதிர்வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

வாக்காளர்கள் நீலம் அல்லது கருப்பு குமிழ் முனைப் பேனா தம்வசம் எடுத்து வர வேண்டும் கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக பேனாக்கள் வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படமாட்டாது.

ஆளடையாளத்தை உறுதிப்டுத்தும் அலுவலர் வழமையாக வாக்காளர் அடையாள அட்டையை தனது கையில் எடுத்து சரிபார்த்து உறுதிப்படுத்துவதுண்டு. ஆனால் இம்முறை கொரோனா முன்பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை இருப்பதால் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தல் அலுவலர் வாக்காளரின் ஆளடையாள அட்டையை தனது கையால் எடுத்து பார்த்து உறுதிப்படுத்த மாட்டார் பதிலாக வாக்காளர் ஒருவர் தனது ஆளடையாள அட்டையை உறுதிப்டுத்தும் தேர்தல் அலுவலர் தெளிவாக நோக்கும் வண்ணம் வாக்காளர் மிகக் கிட்டிய தூரத்தில் வைத்துக் காண்பிக்க வேண்டும்.

விரலுக்கு சாயம் பூசுவதும் கூட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் அதிகரித்த செலவில் ஏற்பாடு செய்யப்ட்டிருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்திலும் தேர்தல் அலுவலரின் கை வாக்காளரின் கை மீது படாது. தூரிகை கொண்டு மை பூசப்படும் ஒருவருக்கு ஒரு தூரிகை என்ற ஒழுங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் உள் நுழையும்போதும் வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறும்போதும் கிருமித் தொற்று நீக்கி ஏற்பாடுகள் இருக்கின்றன.

அதேவேளை காய்ச்சல் பரிசோதிக்கும் வெப்பமானி பரிசோதனை, கைகழுவுதல் ஆகிய செயற்பாடுகள் இடம்பெறாது. நேர முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு இந்த விடயங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டை, குமிழ் முனைப்பேனா, ஆளடையாள அட்டை இவற்றைத் தவிர வேறேதும் தேவையற்ற பொருட்களை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்து வர வேண்டாம்.

வாக்காளர்களுக்கிடையிலான இடைவெளி ஏற்பாடுகளும் வாக்களிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும். வாக்களிப்பின்போது கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அதிகாரிகள் அலுவலர்கள் மாத்திரம் முழுமையாகச் செயற்படுத்திவிட முடியாது. இந்த விடயத்தில் வாக்காளர்களாகிய பொதுமக்களின் அக்கறை மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவும் அவர் தெரிவித்தார்.