தளர்வுகள் இல்லாத ஊரடங்கு- வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின

265 0

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காரணமாக வாகன நடமாட்டம் இல்லாததால் சென்னையில் சாலைகள் வெறிச்சோடின.சீனாவில் உருவெடுத்த கொடிய கொரோனா வைரஸ், தமிழகத்திலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்று குறைந்த நிலையில், பிற மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசு பல்வேறு வகையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்த 1-ந்தேதி தொடங்கிய 6-ம் கட்ட ஊரடங்கு இம்மாதம் 31-ந்தேதி வரையிலும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்காக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி பாலைவனம் போல வெறிச்சோடி காணப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, காமராஜர் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகளிலும் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, சரக்கு வாகனங்கள் உள்பட அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர்த்து, தனிநபர் வாகனங்கள் மிகவும் குறைவான அளவிலேயே பயணித்தன.

முறையான பாஸ் இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து, அபராதம் விதித்தனர். அனைத்து சாலைகளிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்தார்கள். இதுதவிர சென்னையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு தடை செய்யும் வகையில் மூடப்பட்டிருந்தன.

மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கை பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களில் காலையில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே சுற்றித்திருந்தனர். அவர்களை நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழை, மிரட்டி வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்தது. அரசு எவ்வளவோ சொல்லியும், கொரோனா நோயின் உக்கிரத்தை புரிந்துகொள்ளாமல் வீதிகளிலும், சாலைகளிலும் வலம் வந்தவர்களை மழை பணிய வைத்தது.

மழை காரணமாக பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.

பிற்பலுக்கு பின்னர் மழை வெறித்ததும், சிலர் மீண்டும் வெளியே வழக்கம்போல தலை காட்டத்தொடங்கினார்கள். தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நாட்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி மழையும் கொரோனாவுக்கு எதிரான போரில் உதவிபுரிந்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை வெற்றிகரமாக கடைபிடிப்பதற்கு, மழையும் வலு சேர்த்தது என்று சொன்னால் அது மிகையல்ல.