ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

397 0

anaijiravuஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து, உப்பளத்தின் ஊழியர்களும் தொழிலாளர்களும்  அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் இயக்கச்சியில் நடைபெற்றது.

பரந்தன், குமரபுரம், உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, இயக்கச்சி, சங்கத்தார்வயல், கோயில்வயல்,முகாவில், மாசார், சோரன்பற்று, பேரலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தொழிலாளர்களும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட அறிவிப்பில் நஸ்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்களை தனியார் மயப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆனையிறவு உப்பளத்தையும் அவ்வாறு தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்தே தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் முன்ளாள் உறுப்பினர் அன்ரன் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு உப்பளத்தைத் தனியார் மயமாக்கப்படுவதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் தொழிலாளர்களுடைய உரிமைக்கான போராட்டத்தைப்பற்றியும் கருத்து தெரிவித்தனர்.