ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

229 0

201611231751456920_mk-stalin-executives-plan-to-will-thoothukudi-special_secvpfஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் நேர்முக உதவியாளர் நியமிப்பது சட்டமன்றப் பணியாளர் விதிகளுக்கு உட்பட்ட செயல்பாடாகும். அந்த அடிப்படையில், என் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட அரசு நேர்முக உதவியாளர் ஆதிசேசனை எனக்கு தகவல் சொல்லாமலேயே ஒரு தலைபட்சமாக சட்டப்பேரவை செயலாளர் நீக்கினார்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான எனக்கு நியமிக்கப்பட்ட நேர்முக உதவியாளரை நீக்கி உத்தரவு பிறப்பித்தது செல்லாது என்று நான் பேரவைத் தலைவரிடம் புகார் செய்தேன்.

ஆனால் இதுகுறித்து பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், “சட்டமன்ற பணியாளர் விதிகளுக்கு முற்றிலும் முரணாக போடப்பட்ட இந்த அரசாணையை”, செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

வழக்கினை விசாரித்து, சட்டப்பேரவைச் செயலாளரின் அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஆதிசேசனை நேர்முக உதவியாளராக நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சட்டரீதியான செயல்பாடுகளில் கூட அரசியல் காழ்ப்புணர்வுடன் அரசு அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் செயல்படுவதும், அதற்கு கட்சி நிர்வாகி போல பேரவைத் தலைவர் துணை போவதும் நல்ல சட்டமன்ற மரபல்ல.

இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், ஜனநாயக மரபுகளை காக்கும் ஆரோக்கியமான அரசியல் நாகரிகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேரவைத் தலைவர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சட்டமன்ற மரபுகளை நீதிமன்றத்தின் மூலம் மீட்க வேண்டிய சூழலை தமிழகத்தை ஆள்வோர் இனியும் உருவாக்கக் கூடாது எனவும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.