சீனாவில் மின்உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

228 0

201611241033388739_china-power-plant-collapse-kills-at-least-40-xinhua_secvpfசீனாவில் மின்உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியின்போது கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமானப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று கட்டுமானப் பணிகள் தொடங்கிய சிறிது நேரத்தில், அதிக எடை கொண்ட கான்கிரீட் ஸ்லாப்புகள், இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன. இதனால், ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பலரது உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்தில் 40 பேர் பலியானதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கின்றன. ஆகஸ்ட் மாதம் ஹூபேய் மாகாணத்தில் பைப்லைன் வெடித்து சிதறியதில் 21 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சீனாவில் தொழிற்சாலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதில் 130 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் ஜியாங்சு மாகாணத்தில் ஏப்ரல் மாதம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ 16 மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.