அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் – டிரம்ப் நிர்வாகம் தகவல்

284 0

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலகமெங்கும் 1.35 கோடி பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது.
அமெரிக்காவில் அதிகப்படியாக 33.64 லட்சம் பேருக்கு தொற்று உள்ளது.
அமெரிக்காவில் தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகளை பல மாகாணங்களும் அறிவித்த நிலையில் தொற்று மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது.
இதையொட்டி, அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி, ஸ்டான்போர்டு மருத்துவக் கல்லூரியுடன் ஒரு இணையதள வழி கருத்தரங்கில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவில் இப்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாடு ஒருபோதும் முழுமையாக மூடப்படாததே இதற்கு காரணம். ஆமாம், நாம் ஒருபோதும் முழுமையாக மூடப்பட முடியாது. நீங்கள் மூடினீர்கள். ஆனால் உடனே படிப்படியாக திறக்கத்தொடங்கி விட்டீர்கள்.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் முடிவைக்கூட அமெரிக்கா காணத்தொடங்கவில்லை.
இதற்கு சாத்தியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. எப்படியும் பாதுகாப்பான ஒரு தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கி விடுவார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம். என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிஎன்பிசி டெலிவிஷன் சேனல் தெரிவித்துள்ளது.
நவம்பர் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிற டிரம்ப் நிர்வாகம், சுகாதாரத் துறையையும், விஞ்ஞானிகளையும், தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் முடுக்கி விட்டுள்ளது.