தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது. அரச நிறுவனங்களில் சேவையாற்றும் சேவையாளர்கள் நேற்றைய தினம் வாக்களித்திருந்த நிலையில் இன்றைய தினமும் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறி;ப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலின் பின்னர் மலையகத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலின் ஊடாக மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான ஏ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிச்சயமாக பெற்றுக்கொள்ளும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் வேட்பாளருமான மருதப்பாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார
மலையகத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான மாணவர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் விடுத்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தங்களது கட்சி உறுப்பினர்கள் ஊதியத்திலிருந்து ஒரு தொகையை மக்களுக்காக ஒதுக்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தான் உரிமை அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

