வருவாய், சொத்து சான்றிதழ் வழங்கலாம்- கலெக்டர்களுக்கு, அரசு உத்தரவு

406 0

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருவாய், சொத்து சான்றிதழ் வழங்கலாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்காக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினர் (இ.டபுள்யு.எஸ்.) 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறும் வகையில் வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை வழங்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு 2019-ம் ஆண்டு மே மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 4-ந் தேதி மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, கடந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும், எனவே இ.டபுள்யு.எஸ். பிரிவினருக்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்க வேண்டாம் என்று தாசில்தார்களை அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் 9-ந் தேதி (நேற்று) சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இ.டபுள்யு.எஸ். பிரிவினருக்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை, 2019-ம் ஆண்டு மே மாதம் சுற்றறிக்கையின்படி தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சான்றிதழில், மத்திய அரசுப் பணிகள் அல்லது மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி இடம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்காக மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.