முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் – பாடசாலை அதிகாரிகள்

306 0

muslim-1கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து செல்வதை அடுத்து அங்கு சர்ச்சை எழுந்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைகளுக்கு வர கூடாது எனவும், சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் எனவும் அதிகாரிகள் நிர்ப்பந்தித்து வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாஃரூக் ஷிப்லி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அதற்கான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை என அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற 216 தமிழ் மொழி ஆசிரியர்கள் அண்மையில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றிருந்தனர்.

இவர்களில் 169 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நியமன கடிதங்களை பெற்றுக் கொண்ட ஆசிரியர்களில் ஒரு தொகுதியினர் தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடையில் சென்ற நிலையில், அபாயா உடையில் அனுமதி மறுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளமை குறித்து தன்னிடம் முறையிடப்பட்டுள்ளதாக அவர் பி.பி.சியிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் தனித்துவ பண்பாட்டை கொண்டுள்ள ஒரு தேசிய இனம் எனவும், அவர்களின் தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு அபாயா உடைக்கு தடைவிதிக்கப்படுமாக இருந்தால், அது மனித உரிமை மீறல் எனவும் மொஹமட் பாரூக் ஷிப்லி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அரச அலுவலகங்களில் அபாயா உடையுடன் முஸ்லிம் பெண்கள் பணியாற்றுவதாகவும், பாடசாலைகளில் மாத்திரம் ஏன் பணியாற்ற முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.