தமிழகத்துக்கு மீண்டும் மத்திய குழு இன்று வருகை

290 0

கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு மீண்டும் மத்திய குழுவினர் இன்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தலைதூக்கிய நிலையில் உள்ளது. தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் தொற்று அதிகம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு உத்தரவுகளை அரசு வழங்கியுள்ளது.

இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால் கடந்த 2 நாட்களாக தொற்று பரவல் சிறிதளவு குறைந்ததாகத் தெரிகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 1,203 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். கடந்த மார்ச் முதல் இதுவரை கொரோனா தொற்றினால் 1,575 பேர் இறந்துவிட்டனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு 3-ம் முறையாக அனுப்பி உள்ளது. முதல் குழு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், அதன்பின்னர் 2-வது குழுவும் சென்னையில் ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த நிலையில் 3-வது முறையாக மத்திய குழு தமிழகம் வருகை தர உள்ளது. இந்த மத்திய குழு, பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னைக்கு வருகிறது. தமிழகத்தில் 3 நாட்கள் தங்கி இருந்து தொற்று அதிகமாக இருக்கும் இடங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை இந்த குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்தக் குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா, சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்றுள்ளனர். இரண்டு மருத்துவ நிபுணர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

மத்திய குழுவினர் தங்களது ஆய்வை முடித்த பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் இந்தக் குழு சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.