திருகோணமலையில் நேற்று மாலை மூன்று விபத்துக்களில் 9 பேர் படுகாயம்!

283 0

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மூன்று விபத்துகளில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி இறக்க கண்டி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்ற வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தர்.

கும்புறுப்பிட்டி, 05ம் வட்டாரத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான பீ.மதனகுமார் 32 வயது அவரது சகோதரி மற்றும் அவரது மனைவி, மூன்று பிள்ளைகளே படுகாயமடைந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாமல்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நான்கு வயது சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மகாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சங்கம பகுதியில் லொறி ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுடன் மோதியதில் 11 மாத குழந்தை மற்றும் 32 வயதுடைய பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்துக்கள் மூன்றுடனும் தொடர்புடைய சாரதிகளை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்களை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மொரவெவ, சீனக்குடா, குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.