அரசியல் சாயம் பூசும் வகையில், கருத்துக்களை வௌியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது!

352 0

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, மதிப்பிற்குரிய காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் அது கண்டனத்துக்குரியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடக் கூடியவர்கள் மதத் தலைவர்கள் பற்றி பேசுவதும் மதத் தலைவர்கள் அரசியல் விடயங்கள் பற்றி பேசுவதும் இந்த நாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும் , அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கலாநிதி வி.ஜனகன் இந்த கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஆனால், ஹரின் பெர்ணான்டோ தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக கூறியிருந்தால் கூட, கத்தோலிக்க மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவரான காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை பற்றி அரசியல் சாயம் பூசும் வகையில், கருத்துக்களை வௌியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.

இது முழுமையாக கண்டிக்க கூடிய விடயமாகத்தான் நான் கருதுகின்றேன். அதேநேரத்தில் மதத்தலைவர்கள் நேரடியாக அரசியலில் தலையிடுவது கூட தவறான முன்னுதாரணமாகத்தான் அமைகின்றது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் காலாகாலமாக இந்த விடயம் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு, ஏற்படவிருந்த இன, மத ரீதியான முரண்பாடுகள் கூட காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்பினால் களையப்பட்டன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

அவர் இந்த அசம்பாவிதம் தொடர்பாக எழுப்பிய குரலின் காரணமான இன முறுகல்கள் கூட தடைப்பட்டன. ஒரு மதத்தலைவர் தனது மதம் சார்பாக கருத்து வௌியிடுவது அவரது முதல் கடமையாகும். அதன் பின்னர்தான் குறித்த மதத் தலைவர் ஏனைய விடயங்கள் பற்றியும் அரசியல் சார்ந்த விடயங்கள் பற்றியும் பேச முடியும்.

எனவே, அவர் அரசியல் சம்பந்தமாக பேச வேண்டும், அல்லது ஒரு அரசியல் தரப்பு பற்றி சார்பாக பேச வேண்டும் என்று நினைப்பதென்பது அரசியல்வாதிகள் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் முறையில் இருக்கின்ற தவறாக நாங்கள் கருதுகின்றோம்.

பொதுவாகவே இந்த அரசியல்வாதிகளின் எண்ணப்பாட்டில் இந்த மதத்தலைவர்களுடைய எண்ணங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில் எந்தவித உடன்பாடும் இல்லை. எனவே, அரசியல்வாதிகள் தமது மதத் தலைவர்களை ஒருபக்கம் சார்ந்து அரசியல் பேச வேண்டும் என்று நினைப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்று கலாநிதி வி.ஜனகன் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாக கண்டன அறிக்கையொன்றை வௌியிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி உடனடியாகவே மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து தவறு நடந்தமைக்கான வருத்தத்தையும் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். கூட்டணியின் தலைவர் என்ற வகையில் அவர் சரியான விடயத்தைத்தான் செய்திருக்கிறார் என்பதை தான் நம்புதாக கலாநிதி வி.ஜனகன் மேலும் தெரிவித்தார்.