கோவை மாவட்டத்துக்குள் வெளிநபர்கள் வருவதை தடுக்க வாட்ஸ்-அப் குழு அமைத்து கிராம மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதி வரை கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. ஆனால் விமானம் மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்ட பின்னர் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 20 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக சென்னையில் இருந்து வந்தவர்களால் தான் கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால் சிலர் மெயின் ரோட்டில் வராமல் கிராமப்புறத்தில் உள்ள சாலைகள் வழியாக கோவைக்குள் வருவதுடன், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் யார் ஊருக்கு புதிதாக வருகிறார்கள் என்று தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மயிலம்பட்டி மற்றும் கரையம்பாளையம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு யாராவது புதிதாக வந்திருக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக வாட்ஸ்-அப் குழு அமைத்துள்ளனர். அதில் 250 பேர் வரை இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து மயிலம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியதாவது:-
மயிலம்பட்டி, கரையம்பாளையம் பகுதியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் வெளியூர்க்காரர்கள் என்பதால் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது தெரியாது. சில நாட்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்கள் வந்தது பற்றி அருகில் குடியிருந்தவர்கள் வாட்ஸ்-அப் குழுவில் தகவல் பரிமாறியதால் தெரியவந்தது.
எனவே எங்கள் ஊருக்கு யார் புதிதாக வந்தாலும் அவர்களை பற்றிய தகவலை ஊராட்சி அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவி வருகிறோம். இது தவிர கொரோனா பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும் இந்த குழுவில் பரிமாறிக் கொள்கிறோம்.
இந்த குழுவில் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள், அந்தந்த பகுதி இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இடம் பெற்று உள்ளனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்கிறார்களா? என்றும் அக்கம் பக்கத்தினர் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் வெளியே சென்றால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

