சிறிலங்காவில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜூவன் ஹூல் தலைமையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புக்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்களை தேர்தல் ஆணைக்குழு அனுமமதிக்க வேண்டும்.
கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜூவன் ஹூல் தலைமையில் முன்னெபடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது.
இரட்டை குடியுரிமையினை கொண்ட ரட்னஜூவன் ஹூல் எவ்வாறு சுயாதீனமான முறையில் செயற்படுவார் என்ற சந்தேகம் காணப்படுகிறது.
இதேவேளை விருப்பு வாக்கு முறைமைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை சீர்த்திருத்தம் தொடர்பில் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் விருப்பு வாக்கு முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே புதிய அரசாங்கத்தில் தேர்தல் முறைமை தொடர்பாக இந்த குழு சமர்ப்பித்த அறிக்கை முழுமையாக செயற்படுத்தப்படும்” என்றார்.

