சிறிலங்காவில் தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி நீக்கம்

247 0

சிறிலங்காவில் தேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 6 மாதக் காலம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.​

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தேயிலை தொழில்துறை பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

இதில், தேயிலை தொழிற்சாலை செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல், தேயிலை இறக்குமதி செய்யும் அநேகமான நாடுகளில் வாங்கும் திறன் ஒப்பீட்டளவில் குறைவடைதல், விநியோக நிர்வாகத்தில் சிக்கல்கள் மற்றும் தயாரிப்பு தரத்தின் நிலைத்தன்மையை பராமரித்தல் ஆகியன பிரதான சவால்களாகும்.

இந்த சவால்களுக்கு மத்தியில் தேயிலை தொழில்துறையின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக நிதி சலுகையாக, ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலை மீதும் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களிடம் தற்போது அறவிடப்படும் 3.50 ரூபாய் தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி 06 மாதக்காலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி வேளாண்மை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.