சிறிலங்காவில் எதிர்காலத்தில் சகல சமூகங்களும் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் போதைப் பொருட்கள், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பணம் கொள்ளை இல்லாத சமூகத்தை உருவாக்குவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உறுதியளித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது பாதுகாப்புச் செயலாளர், பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர்களது வலைப்பின்னல்கள் முடக்கப்பட்டு அவர்களது செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாம் சிறைச்சாலைகளிலிருந்து மொபைல் போன்களைப் பயன்படுத்தி செயற்படுத்தப்படும் போதைப்பொருள் கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகள் முடக்க அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
இத்தகைய சட்டவிரோத தகவல் தொடர்பு வலையமைப்புகளை கண்டறிய அனைத்து தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற தனது முதலாவது உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

