கூட்டமைப்பு உண்மையாக செயற்பட்டால் அரசில் இணையலாம்- மஸ்தான்

300 0

தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து நாட்டின் அபிவிருத்திக்காக உண்மையாக செயற்படுமானால் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசின் பங்காளிகளாவது பற்றி கலந்துரையாடலாமென முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வாக்குகளை ஜனாதிபதி கோட்டாபய பெறுவார்  என நாம் கடந்த முறை சொன்னோம். அதனை மக்கள் நினைக்கவில்லை.

எனினும் 16 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற்றோம்.அதுபோல இந்த தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவதற்கு முயற்சி எடுக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது இப்பகுதியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியின் செயற்பாடுகளில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே அவரது கரத்தினைப் பலப்படுத்துவதற்காக, எமது வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து, எம்மை நாடாளுமன்றம் அனுப்பி அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கலாம் என எமது மக்கள் நினைக்கின்றமையால் நாம் நிச்சயம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவோம்.

இதேவேளை தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து, நாட்டின் அபிவிருத்திக்காக உண்மையாக செயற்பட்டு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கினால் அரசின் பங்காளிகளாவது தொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாடப்படும்” என குறிப்பிட்டார்.