கடற்படையினரைத் தாக்கிய மூவரைத் தேடி வேட்டை

263 0

யாழ்ப்பாணம், அனலைதீவுப் பகுதி நேற்று முன்தினம் காலை முதல் கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேறவோ, கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவோ கடற்படையினர் அனுமதிக்க மறுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

கடற்படையினர் இருவர் மீது மூவர் அடங்கிய குழுவொன்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களைத் தேடியே அனலைதீவு முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குழுவொன்றால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து கடற்படையினர் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அனலைதீவில் திங்கட்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்புக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கடற்படையினர் தலையிட்டு இந்த மோதலைத் தீர்த்துவைக்க முயன்றுள்ளனர். மோதலுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் அவர்கள் இது குறித்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் மோதலுடன் தொடர்புபட்ட தரப்பைச் சேர்ந்த ஒருவர் நேற்று அனலைதீவில் உள்ள கடற்படை முகாமுக்குச் சென்று கடற்படையினருடன் முரண்பட்டுள்ளார். இதன்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கடற்படையினர் கூறியுள்ளனர். அவர் கடற்படை முகாமுக்குள் நுழைய முயன்றதாகவும் அவர்கள் குற்றஞசாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்த நபர் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவரும் கடற்படையினருடன் முரண்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடற்படையினருடன் முரண்பட்ட மூவரும் கடற்படையினர் தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து சிகிச்சைக்கு அனலைதீவு வைத்தியசாலைக்கு நேற்று சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். இதனை அறிந்த கடற்படை அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் அவர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து கடற்படையினர் இருவரும் வெளியேறிச் சென்ற நிலையில் அவர்களைப் பின்தொர்ந்து மூவரும் இணைந்து போத்தல்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக கடற்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னர் அவர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே அனலைதீவுப் பகுதி முழுமையாகக் கடற்படையினரின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டு அவர்பளைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. நேற்று இரவு வரை இவர்களை தேடி தீவிர வேட்டை இடம்பெற்றபோதும் அவர்கள் சிக்கவில்லை.

இந்நிலையில் அனலைதீவுப் பகுதி மக்கள் வெளியேற முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளமை குறித்து மாவட்ட அரச அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, சம்பவத்தை அவர் உறுதி செய்தார். இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.