ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

67 0

sri-lanka-unஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும் அறிவித்தது.

சிறிலங்கா தேசிய புலனாய்வின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் ஜெனீவாவில் தற்போது இடம்பெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான நிலைப்பாடு ஆராயப்பட்ட இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தார்.

சிறிலங்காவிலிருந்து ஜெனீவாவிற்குப் பயணம் செய்த பிரதிநிதிகள் குழுவில் மெண்டிஸ் அங்கம் வகித்தமையானது  குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.

மறுபுறத்தே, சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயர் மட்டப் பிரதிநிதியான மெண்டிஸ், நாட்டின் பாதுகாப்புத் துறைசார் உறுப்பினர்களால் இழைக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாகப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பான பதவியில் உள்ளமையாலேயே இவர் ஜெனீவாவிற்குச் சென்ற பிரதிநிதிகள் குழுவில் உள்ளடக்கப்பட்டார் என சிறிலங்கா அரசாங்கம் விவாதிக்கலாம்.

இருப்பினும், சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெண்டிஸ் பதிலளிக்க அல்லது பதிலளிப்பதற்கு விருப்பமற்றவராவோ காணப்பட்டார்.

sri-lanka-un

‘சட்ட ஆட்சியானது சிறிலங்காவில் மிக மோசமாக உள்ள போதிலும் சிறிலங்கா அரசாங்கமானது இது தொடர்பில் அலட்சியமாக உள்ளது என்பது நிரூபணமாகிறது. அதாவது சித்திரவதைகள் தொடர்பான சாசனத்தில் சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ள போதிலும் இந்த சாசனத்தை சிறிலங்கா கடைப்பிடிக்கத் தவறியுள்ளது.

சிறிலங்காவின் மிக மோசமான சித்திரவதைகளுக்குக் கட்டளைப் பொறுப்பைக் கொண்டிருந்தவரும் ஓய்வுபெற்ற பின்னரும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டவருமான ஒருவர் தற்போது ஜெனீவாவில் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பங்குபற்றிய சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசாங்கம் சித்திரவதைகள் சாசனத்தை மீறுவதையே சுட்டிநிற்கிறது’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தினதும் மனித உரிமைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத் தொடரில் மெண்டிஸ் பங்குபற்றியதானது, சிறிலங்காவில் உண்மையில் மாற்றம் வரும் என்கின்ற நம்பிக்கைகளுடன் வாழும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என யஸ்மின் சூகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரவதை மற்றும் மீறல்கள் போன்றன இலங்கைத் தீவில் பல பத்தாண்டுகளாகத் தொடரும் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான மீறல்களும் சித்திரவதைகளும் தொடர்ந்து வண்ணமேயுள்ளன என யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா  ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் இந்நிலையில் சிவில் அமைப்புக்கள் சிறிலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இதுதொடர்பாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

‘சிறிசேன அரசாங்கத்தின் கீழும் சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மற்றும் தலையீடுகள், வெள்ளை வான் கடத்தல்கள், தமிழ்ப் புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

முன்னர் புலிகளுக்கு தகவல்களை வழங்கியவர்கள் உட்பட பல்வேறு வலைப்பின்னல்கள் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவால் கண்காணிக்கப்பட்டு அவை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.   அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றனர்’

‘ஐ.நா சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் எதிர்காலம் சர்ச்சைக்குள்ளான பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிறிலங்காப் பிரதிநிதி ஒருவர் கலந்துகொண்டமையை முதன் முறையாகப் பார்க்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது அசாதாரணமான சம்பவமாக உள்ளது. அதாவது இவ்வாறானதொரு நிலையில் சிறிலங்காவில் போர்க் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதென்பது சாத்தியமா என்கின்ற எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளது’ என சூகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மெண்டிஸ் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்குபற்றியதானது போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா அதிலிருந்து மீள்வதற்கு இன்னமும் நீண்டகாலம் எடுக்கும் என்கின்ற பிறிதொரு எச்சரிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

‘சிறிலங்கா பொறுப்புக்கூறல் தொடர்பாக தீவிர கவனம் எடுக்க விரும்பினால், மெண்டிஸ் ஜெனீவாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வரும் போது அவரைக் கைதுசெய்து தண்டனை வழங்க வேண்டும்’ என சூகா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வழிமூலம்    – Huffington post
ஆங்கிலத்தில்  -Taylor Dibbert
மொழியாக்கம் -நித்தியபாரதி