சிறிலங்கா முழுவதும் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணிமுதல் அதிகாலை 04 மணி வரையான ஊரடங்கு உத்தரவு இந்த வாரமும் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக இந்த வாரம், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாது என ஆங்கில ஊடகம் ஒன்று அரச அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹாவில் நேற்று (08) முதல் பொது போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த வாரம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக தளர்த்தப்படும் என ஊகங்களுடன் பல செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், ஊரடங்கு உத்தரவை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், மாலை நேரங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இரவு வேளைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வரை, 1,800 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 990 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டவர்களில் 550 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 800 ற்கும் மேற்பட்டவர்கள் கடற்படையினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

