இராணுவ ஆட்சியா நடைபெறுகின்றது? சோதனைகளில் எதற்காக படையினர்?

50 0

முல்லைத்தீவில் வழமைக்கு மாறாக சோதனைச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலங்களிலும் பல பகுதிகளில் சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. காவற்றுறையினர் மாத்திரமின்றி மிக அதிகமாக படையினரே சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன்,வட்டுவாகல் பாலத்தில் ஒரு முனையில் இராணுவத்தினரும், மறு முனையில் கடற்படையினரும் சோதனைகளை மேற்கொள்கின்றனர். சோதனை நடவடிக்கைகளில் இவ்வாறு படையினர் ஈடுபடுத்தப்படுவது இராணுவ ஆட்சி நடைபெறுவது போன்ற தோற்றமே மக்களிடம் ஏற்படுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வி :- அண்மையில் நாயாறுப் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்ததன் பின்னணி என்ன? 

பதில் :– மீள் குடியேற்றத்தின் பின்பு 2011ஆம் ஆண்டிலிருந்தே தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் நாயாற்றுப் பகுதியில் படையினரின் ஒத்துழைப்புடன் இருந்துவருகின்றது. 2011ஆம் ஆண்டில் 72மீனவர்கள்அப்பகுதியில் தொழில்செய்யத் தொடங்கியிருந்தனர். அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் இருந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்திருக்கின்றது. இது தொடர்பாக அங்குள்ள தமிழ் மீனவர்கள் எனக்குப் பலமுறை அறியத் தந்தார்கள். அப்போதல்லாம் அவ்விடத்திற்கு நேரில் சென்று குறித்த அத்துமீறல்களை வெளிப்படுத்தி வந்திருக்கின்றேன்.

2014ஆம் ஆண்டில் நாயாற்றுத் தமிழ் மக்களின் குடியிருப்பிற்கு அருகாமையில் தமிழருடைய காணியில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர் நாட்டியிருந்த எல்லைக் கற்களை மக்களுடன் சென்று அகற்றினோம்.

2018ஆம் ஆண்டில் அப்பகுதியில் தமிழ் மீனவர்களின் வாடிகள் சிங்கள மீனவர்களால், இரவு 11.00மணியளவில் எரிக்கப்பட்டது. உடனேயே அங்கு நேரில் சென்று பார்வையிட்டு இது தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தேன்.

தற்போது கொரோனா பேரிடர் சூழல் காலத்தில் புதிதாக 1000இற்கு உட்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் அப்பகுதியில் அத்துமீறி தொழில் செய்வது குறித்து, தமிழ் மீனவர்கள் எனக்கு அறியத்தந்திருந்தனர். இதையடுத்து நானும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் அங்கு நிலமைகளை நேரில் கண்டு வெளிப்படுத்தினோம்.

கேள்வி :- முல்லைத்தீவு மக்களின் தொழில்களில் பொதுவாக விவசாயம், கடற்றொழில், கால்நடை வளர்ப்பு காணப்படுகின்றது. கொரோனாவின் பின்னர் அம்மக்களின் பொருளாதார நிலமை எவ்வாறுள்ளது?

பதில் :- முல்லைத்தீவு மக்களின் பொருளாதாரம் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், கால்நடை ஆகிய மூன்று பொருண்மியத் தளங்களுமே இக் காலத்தில் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

ஊரடங்குக் காலத்தில் ஒருவித அச்சத்துடன் மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இக் காலத்தில் முழுமையான பயனை பெற்றிருக்கவில்லை. சந்தைப்படுத்தலிலும் பல இடர்பாடுகளை எதிர்நோக்கினர்.

ஊரடங்குக் காலத்தில் வயல் காவல் உள்ளடங்கலாக பல நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. பயிர் செய்கைகளுக்கான உர வினியோகம் உரிய நேரங்களில் நடைபெறவில்லை. இவற்றால் உரிய பலனை விவசாயிகள் பெற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி :- தற்போது முல்லைத்தீவுப் பகுதியில் சோதனைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது குறித்து

பதில் :– முல்லைத்தீவில் வழமைக்கு மாறாக சோதனைச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலங்களிலும் பல பகுதிகளில் சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. காவற்றுறையினர் மாத்திரமின்றி மிக அதிகமாக படையினரே சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வட்டுவாகல் பாலத்தில் ஒரு முனையில் இராணுவத்தினரும், மறு முனையில் கடற்படையினரும் சோதனைகளை மேற்கொள்கின்றனர். சோதனை நடவடிக்கைகளில் இவ்வாறு படையினர் ஈடுபடுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவ ஆட்சி நடைபெறுவது போன்ற தோற்றமே மக்களிடம் ஏற்படுத்தப்படுகின்றது. கொள்வனவு, விற்பனவு நடவடிக்கைகள் ஊரடங்குக் காலத்தில் சீராக இடம்பெறவில்லை. கால்நடைகளை நம்பி வாழும் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்கவில்லை.

கேள்வி :- பொதுத்தேர்தல் ஒன்று வரவிருக்கும் நிலையில், அதில் மக்களின் ஈடுபாடு எவ்வாறு இருக்குமென்று எண்ணுகின்றீர்கள்?

பதில் :- தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை இம்முறையும் தமிழ்த் தேசியப் பற்றுடன் உயர்வாக வெளிப்படுத்துவார்கள். தமிழ்த்தேசியத்தை சிதைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் தமிழ் மக்களிடம் எடுபடாது.

கேள்வி :-இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

பதில் :- தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறிக் கைக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை தமிழ் மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.  தமிழர் தாயகத்தில் பௌத்த மயமாக்கல் மூலமாக தமிழர் நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் நிலை தொடர்பில் முழுமையாக வெளிப்படுத்தல் வேண்டும்.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான வடகிழக்குப் பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான மனநிலையை இலங்கை அரசாங்கமும், தென்னிலங்கை மக்களும் மாற்றிக்கொள்ளவேண்டும்.

இங்கு நடந்த இன அழிப்பு, போர்க்குற்றங்கள்மீதான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.

தமிழ் மக்களின் விருப்பின் அடிப்படையிலான தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு/ வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும்.

கேள்வி ; நந்திக்கடல்,வட்டுவாகல் நிலக் கையகப்படுத்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தீர்கள்.அது பற்றி விளக்க முடியுமா?

பதில் : பண்டைய காலம் தொட்டு இன்று வரை நந்திக்கடல் ஒரு செழிப்பான இடம். இங்கு வீச்சு வலைகள் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுவலைகள் மூலமாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதாரக் களமாக நந்திக்கடலே அமைகிறது.

1.தொல்லியல் திணைக்களம்

1817 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சப்த கன்னிமார் ஆலயம் இருந்ததற்கான வலுவான சான்று J.P. லூயிசு அவர்களின் வன்னி மாவட்டங்களின் கையேடு நூலில் உள்ளது.

பழமை வாய்ந்த இந்தச் சைவக்கிராமத்தில் பெளத்தகுடும்பங்கள் ஒன்றுமேயில்லாத நிலையில் 2010 இல் ஒரு பெரிய பெளத்த விகாரையை நிறுவியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டிற்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு விகாரையும் இல்லை.

2 இராணுவ முகாம்

பெளத்த விகாரையை அண்டிய பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணியைக் கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளதோடு நந்திக்கடலின் வடக்கு ஆற்றின் கரையோடு ஆக்கிரமித்து மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3.கடற்படைத்தளம் 

மக்களுடைய காணிகளில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி 379 ஏக்கர் 2 றூட் 4 பேர்ச்
அரசகாணி 291 ஏக்கர் 1 றூட் 6 பேர்ச்
மொத்தம் 670 ஏக்கர் 3 றூட் 10 பேர்ச்

இதில் 617 ஏக்கர் காணியைக் கையகப்படுத்தி கடற்படைத்தளம் அமைத்துள்ளனர்.<br />
வடக்கு ஆற்றின் மறுகரையோடு கடற்படையினர் ஆக்கிரமித்து மீனவர்கள் அப்பகுதிக்குள் நுழையாதவாறு வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.

4. வன ஜீவராசிகள் திணைக்களம்

காமினி செயவிக்ரம பெரேரா நிலைபெறு தகு அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் 2017.01.24 ஆம் திகதி வர்த்தமானி மூலம் 4141.67 கெக்டயர் அதாவது 10230 ஏக்கர் நந்திக்கடலும் அதனை அண்டிய பகுதிகளிலுமாக தமது ஆளுகைக்குள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கேள்வி ; கேப்பாப்புலவு மக்களின்காணி விடுவிப்பு தொடர்பாக இப்போதைய நிலைமைகள் பற்றிக் கூறமுடியுமா?

பதில்; கேப்பாப்புலவு, புலக்குடியிருப்பு மக்கள் இடம்பெயர்வு வரை யாரிடமும் கையேந்தாமல் தங்களுடைய வயல்கள்,தோட்டங்கள்,காணிகளில் உள்ள வான்பயிர்கள்,கடலிலே மீன்,இறால்,கால் நடைகளினால் கிடைக்கும் பயன்கள் என முழுமையான செழிப்போடு தான் வாழ்ந்து வந்தவர்கள்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் படையினர் இருந்ததே கிடையாது.

மக்களை மீள்குடியேற்றம் செய்தபோது அண்மித்த சீனியா மோட்டை, சூரிபுரம் பகுதியில் தற்காலிக குடியேற்றம் என்று தான் குடியேற்றினார்கள்.

பல ஆண்டுகளாகியும் தங்களின் சொந்த இடங்களுக்கு விடவில்லை என்றே போராட்டம் நடத்தினார்கள். மக்களின் போராட்டத்தினால் சில காணிகள் விடப்பட்டன. இருந்தும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் இன்னும் 171 ஏக்கர் காணிகள் விடப்படவேண்டும் என மக்கள் கூறுகின்றனர். இதில் நான்கு பேருடைய காணிகள் தலா 25 ஏக்கர் வீதம் 100 ஏக்கர் காணியும் 56 பொதுமக்களுடைய 71 ஏக்கர் காணியும் இன்னமும் விடுபட வேண்டும்.

காணிகள் விடுவிப்புக்கான போராட்டத்தை கொரொனா இடர்காலப் பகுதியில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். தமது நிலத்தை மீட்கும் வரை இவர்கள் போராடுவார்கள்.

ரொஷான் நாகலிங்கம்