ஜோர்ஜ் புளொய்டின் கொலையும் கலவரங்களும் அமெரிக்காவில் ஆழமாக வேர்விட்ட இனவெறியின் வெளிப்பாடு

54 0

மிகவும் மிருகத்தனமான முறையில் 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து நாடு பூராகவும் பரவியிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களும் ‘உலகின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயகம்’ என்று தன்னைக் கூறிக்கொள்கின்றதும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்கா பூராகவும் மனித உரிமைகளின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்கின்ற நாடான அமெரிக்காவில் இனவெறி எந்தளவு தூரத்திற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

அமெரிக்க நடிகர் ஜக் ஹீலியும், புலனாய்வுப் பத்திரிகையாளர் டியோன் சியேஸியும் மே 30 நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தற்போதைய நிலைவரத்தை இரத்தினச்சுருக்கமாக வர்ணித்திருக்கிறார்கள்: ‘அமெரிக்கா இப்பொழுது ஏககாலத்தில் கொரோனா வைரஸ் என்றும், பொலிஸாரின் கையில் கறுப்பினப் பெண்களும், ஆண்களும் கொலையும் என்ற இரு கொள்ளைநோய்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறது’

அமெரிக்காவின் 75 இற்கும் அதிகமான நகரங்களில் ஒருபுறத்தில் ஆயிரக்கணக்கான வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், மறுபுறத்தில் அரச பொலிஸ் மற்றும் தேசிய காவல்படைக்கும் இடையியே மாறிமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் சண்டைகள் வம்பிற்கு இழுக்கும் சுபாவமுடைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மேலும் அடாவடித்தனமானவராக மாற்றியிருக்கிறது.

எமது நகரங்களின் வீதிகளில் நாம் இன்று காண்கின்றவற்றுக்கு நீதியுடனோ அல்லது சமாதானத்துடனோ எந்த சம்பந்தமும் இல்லை’ என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து வீதிகளில் இறங்கிய வெள்ளையின ஆயுதபாணி ஆர்ப்பாட்டக்காரர்களை ‘மிகவும் நல்ல ஆட்கள்’ என்றும், ஜோர்ஜ் பிளாய்டின் கொலையைக் கண்டித்து மினியாபோலிஸில் ஆர்ப்பாட்டம் செய்யும் பல்லினத்தவர்களைக் குண்டர்களென்றும் அவர் வர்ணித்தார். அடுத்து அவர் ‘சுறையாடல் ஆரம்பமாகும் போது துப்பாக்கிச்சூடும் ஆரம்பமாகிறது’ என்று டுவிட்டரின் பதிவுசெய்தார். வன்முறையைப் புகழ்கின்றமைக்காக டுவிட்டர் சமூக ஊடகம் ட்ரம்பின் அந்தப் பதிவைத் தடுத்தது.

கறுப்பினக் கலகக்காரர்களை அடக்குவதற்கு ட்ரம்ப் இராணுவத்தைத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் நியூயோர்க் டைம்ஸ், ‘இதைப்போன்ற கொந்தளிப்பான தருணங்களில் நிலைவரத்தைத் தணிப்பதற்கு மற்றைய ஜனாதிபதிகள் முயற்சிப்பார்கள். ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் நெருப்புக்குச்சிகளுடன் விளையாடிக்கொண்டு பதட்டநிலையை மேலும் தூண்டிவிடுகிறார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

பாசிஸ எதிர்ப்புக்குழுக்கள் மீது குற்றச்சாட்டு

வன்முறைகளுக்காக அன்ரிஃபா (Antifa) என்ற பாசிஸ எதிர்ப்புக்குழுவைக் குற்றஞ்சாட்டியிருக்கும் ட்ரம்ப், அதைப் பயங்கரவாதக்குழுக்களின் பட்டியலில் சேர்க்கப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். Antifa” என்பது ஜேர்மனியில் நாஸிசத்தின் வளர்ச்சியை எதிர்ப்பதற்கு 1932 ஆம் ஆண்டில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பலகட்சி முன்னணியான ”Antifaschistische Aktion” என்பதன் சுருக்கமாகும். அமெரிக்காவில் அன்ரிஃபா என்பது கறுப்பினத்தவர்களின் உயிர்கள் முக்கியமானவை (Black Lives Matter) ஆக்கிரமி (Occupy) போன்ற ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தளர்வான அமைப்பாகும்.

1980 களில் இருந்து அமெரிக்காவில் அன்ரிஃபா இயங்கிவருகின்ற போதிலும் 2016 இல் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அது முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் அந்த இயக்கம் வன்முறையையும் பயன்படுத்தியிருக்கிறது. அதன் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களின் போது கறுப்புநிற உடையையும், முகமூடியையும் அணிந்திருப்பார்கள். அவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற தீவிர வலதுசாரிக்கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களாகவும், அமெரிக்காவிலுள்ள சுதேச மக்களின் உரிமைகளுக்காகவும் மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும் குரலெழுப்புபவர்களாக இருக்கிறார்கள். வெள்ளைத் தீவிரவாத மற்றும் தீவிர வலதுசாரிக்குழுக்களுக்கு எதிரான இணையத்தளங்களையும் அன்ரிஃபா உறுப்பினர்கள் நடத்துகின்றார்கள்.

அடிப்படைக்காரணிகள்

தற்போதைய கலவரங்களை அமெரிக்க அரசாங்கத்தின் இரும்புக்கரம் இறுதியில் ஒடுக்கும் என்கிற அதேவேளை, ஜோர்ஜ் பிளாய்டின் கொலை மற்றும் அதைத்தொடர்ந்து வெளிக்காட்டப்பட்ட உணர்வுகளுக்கான அடிப்படைக்காரணிகள் தொடர்ந்து நீடிக்கவே செய்யும். இனத்துவ மற்றும் நிறபேத அசமத்துவங்களும், அநீதிகளும் சீர்செய்யப்படாத பட்சத்தில் அந்தக்காரணிகள் மீண்டும் மீண்டும் வன்முறைகளாக வெளிப்படும்.

ஜக் ஹீலியும், டியோன் சியேஸியும் கறுப்பின – வெள்ளையின இடைவெளி குறித்து மேற்கோள் காட்டியிருக்கும் புள்ளிவிபரங்கள் பல விடயங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு மதிப்பீட்டின்படி மினிசோட்டா மாநில சனத்தொகையில் கறுப்பினத்தவர்கள் ஆக 6 சதவீதமாக மாத்திரமே இருக்கின்ற போதிலும், அங்கு கொவிட் – 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களென இதுவரை அறியப்பட்டவர்களில் 29 சதவீதமானோர் கறுப்பினத்தவராகவே இருந்தார்கள். மினியாபோலிஸ் நகரின் சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஆபிரிக்க அமெரிக்கர்களாக இருக்கின்ற போதிலும் அங்கு வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 35 சதவீதமானவர்கள் அவர்களாகவே இருக்கின்றனர்.

‘மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களை நடத்தியிருந்த போதிலும் கூட அமெரிக்காவின் குற்றவியல் நீதிமுறைமையில், வீடமைப்பு முறைகளில், மிகவும் முக்கியமாக சுகாதாரப் பராமரிப்புத்துறையில் இனவெறி ஆழமாக வேரூன்றியிருக்கிறது’ என்று அமெரிக்க எழுத்தாளர் மார்ட்டின் ஹக்கெற்றும், பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஷனீஹுவா லெவினும் ஜனவரி 19 ‘நியூஸ் டுடே’ பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். ‘வரலாற்று ரீதியாக அமெரிக்காவில் வெள்ளையர்கள் மத்தியில் சிசுமரணங்களின் எண்ணிக்கையையும் விடக் கறுப்பினத்தவர்கள் மத்தியில் சிசுமரணங்கள் கணிசமானளவிற்கு உயர்வானவையாக இருந்து வந்திருக்கின்றன. மகப்பேற்றின் போதான மரணங்களைப் பொறுத்தவரை வெள்ளையினப் பெண்களை விடவும் கறுப்பினப் பெண்களே, அதாவது 4 மடங்கு எண்ணிக்கையில் மரணமடைகிறார்கள்’ என்று ஹெக்கெற்றும், லெவினும் கூறுகிறார்கள்

கறுப்பினத்தவர்கள் மீது நச்சுத்தனமான தாக்கமொன்றைக் கொண்டிருக்கும் இனவெறி அவர்கள் மத்தியில் பாரதூரமான உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. கறுப்பினத்தவர்கள் பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளையும், நியமங்களையும் மீறி நடப்பவர்களாகவும் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச் சுபாவம் கொண்டவர்களாகவும் இயல்பில் இருப்பதாக வெள்ளையர்கள் நம்புகிறார்கள். ஆனால் கறுப்பினத்தவர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் இக்குணாதிசயங்கள் எல்லாம் அமெரிக்க சமுதாயத்தின் இனவெறியிலிருந்தே கிளம்புகின்றன

ஒரு அமெரிக்க சமூக ஆய்வொன்றின் பிரகாரம் 64 சதவீதமான ஆபிரிக்க, அமெரிக்கக் குடும்பங்கள் தனியனான பெற்றோரைக் கொண்டிருக்கிறது. திருமணங்கள் பலவீனமானவையாக இருக்கின்றன. கணவன் அல்லது தந்தை காணாமல்போய்விடுகிறார்கள். அதனால் மனைவி அல்லது தாய் தன்னந்தனியளாகக் குடும்பங்களை நிர்வகிக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும் வேண்டியிருக்கிறது. அவ்வாறு கைவிடப்பட்ட நிராதரவான ஒரு குடும்பம் பொலிஸாரினால், புலனாய்வு அதிகாரிகளால் எளிதில் பயமுறுத்தப்படவும், ஏமாற்றப்படவும் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளிடமிருந்து பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்களைப் பொலிஸார் பெறும்நிலை இதனால் ஏற்படுகிறது.

அகலமாகும் வருமான இடைவெளி

கறுப்பினத்தவர்களுக்கும், வெள்ளையினத்தவர்களுக்குமான வருமானங்களில் பாரிய இடைவெளி இருக்கிறது. 2016 இல் ஒரு நடுத்தர வருமானம் பெறும் கறுப்பினத்தவரின் சொத்து 13,460 டொலர்களாக இருந்தது. இது நடுத்தர வருமானம் பெறும் வெள்ளையரின் சொத்தின் பெறுமதியான 142,180 டொலர்களின் 10 சதவீதத்திற்கும் குறைவானதாகும். கறுப்பினத்தவரின் சராசரி சொத்து வெள்ளையரின் சராசரி சொத்தின் 11 சதவீதமாகும். வெள்ளையர்களில் 10 சதவீதத்திற்கும் சற்றுக்கூடுதலானோர் மாத்திரமே எந்தச்சொத்தும் இல்லாதவர்களாக அல்லது எதிர்மறையான சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது கறுப்பினத்தவர்களில் நான்கில் ஒரு பங்கினரிடம் எந்தச் சொத்தும் இல்லை அல்லது எதிர்மறையான சொத்தைக் கொண்டிருக்கிறார்கள். (எதிர்மறையான சொத்து என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் அளவை விடவும், அவரது கடன்களின் அளவு உயர்வாகக் காணப்படுவதாகும்).

2007 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் போது கறுப்பு – வெள்ளை சொத்து இடைவெளி குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சுருக்கமான வர்ணிக்கும் முதுமொழியொன்று வழக்கில் இருக்கிறது. ‘வெள்ளை அமெரிக்காவிற்கு தடிமன் பிடித்தால் கறுப்பு அமெரிக்காவிற்கு சளிச்சுரம் பிடிக்கும்’. கறுப்பு – வெள்ளை சொத்து இடைவெளி பல தசாப்தங்களாகத் தொடர்ந்து நிலைக்கிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அமெரிக்கா பூராகவும் கருத்துக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட 6000 இற்கும் அதிகமானோரில் 58 சதவீதமானவர்கள் அந்த நாட்டில் 13 ஆவது திருத்தத்தின் மூலம் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பிறகு 150 இற்கும் அதிகமான வருடங்கள் கடந்த பிறகும் இன உறவுகள் பாதகமானவையாகவே இருப்பதாகக் கூறியிருப்பதாக பியூ ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இவர்களில் சிலர் இன உறவுகள் மேம்பாடு அடைவதாகக் கண்டார்கள். 56 சதவீதமானவர்கள் ஜனாதிபதி ட்ரம்ப் இன உறவுகளை மோசமாக்கிவிட்டதாக நினைக்கிறார்கள். வெறுமனே 15 சதவீதமானவர்கள் அவர் இன உறவுகளை மேம்படுத்தியிருப்பதாகவும், இன்னும் 15 சதவீதமானோர் அவர் இன உறவை மேம்படுத்த முயற்சித்துத் தோல்வி கண்டுவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்கள். ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்த பின்னர் மக்கள் இனவெறிக்கருத்துக்களை வெளிப்படுத்துவது சர்வசாதாரணமாக வந்துவிட்டது என்று கூறினார்கள்

கறுப்பினத்தவர்கள் குறிப்பாக மனச்சோர்வுடைய சமுதாயமாக இருக்கிறார்கள். கருத்துக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட கறுப்பினத்தவர்களில் 78 சதவீதமானவர்கள் வெள்ளையர்களுடன் சமத்துவமான உரிமைகளைக் கறுப்பினத்தவர்களுக்கு வழங்கும் விடயத்தில் அமெரிக்கா போதுமானளவிற்கு செயற்படவில்லை என்றும், அவர்களில் அரைவாசிப்பேர் நர்டு இறுதியில் இனசமத்துவத்தை அடைவது சாத்தியமற்றது என்றும் கூறினார்கள். கறுப்பினத்தவராக இருப்பது வாழ்க்கையில் முன்னேறிச்செல்வதற்கு மக்களுக்கு இருக்கும் ஆற்றலைப் பாதிக்கிறது என்று அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர் (56 சதவீதமானோர்) கூறியிருக்கிறார்கள்.

65 சதவீதமான அமெரிக்கர்கள் (இன மற்றும் மதக்குழுக்கள் மத்தியிலுள்ள பெரும்பான்மையானவர்கள் உட்பட) ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிறகு மக்கள் இனவெறித்தனமான அல்லது உணர்வுகளை மதிக்காத கருத்துக்களை வெளிப்படுத்துவது கூடுதலானளவிற்குப் பழக்கமானதாக வந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இனவெறித்தனமான ஏளனப்பேச்சுக்கள் ஓரளவிற்கு ஏற்புடையனவாக மாறிவிட்டதாக 45 சதவீதமானவர்கள் கூறுகிறார்கள். ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மத்தியில் 84 சதவீதமானவர்கள் இது இப்போது கூடுதலானளவிற்கு வழக்கமாகிவிட்டது என்றும் 64 சதவீதமானவர்கள் இது கூடுதலானளவு ஏற்புடையதாகிவிட்டது என்றும் கூறினார்கள். குடியரசுக்கட்சிக்காரர்கள் அரைவாசிக்கும் சற்று அதிகமானவர்கள் இது இப்போது கூடுதலானளவு வழக்கமாகிவிட்டது என்றும், வெறுமனே 22 சதவீதமானவர்கள் இவ்வகையான கருத்துக்களை மக்கள் வெளிப்படுத்துவது கூடுதலானளவு ஏற்புடையதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்

ஒபாமா சிறப்பானவர்

இன உறவுகளை ட்ரம்ப் எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பான கருத்துக்கள் அந்த உறவுகளை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பான கருத்துக்களைவிட மிகக் கூடுதலானளவு எதிர்மறையாக இருக்கின்றன. பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது இன உறவில் மேம்பாட்டைச் செய்தார் என்று 37 சதவீதமானோரும், அவர் இன உறவுகளை மேம்படுத்த முயன்று தோல்விகண்டார் என 27 சதவீதமானோரும் கூறினார்கள். ஒபாமா இன உறவுகளைப் படுமோசமாக்கியதாக அமெரிக்கர்களில் கால்வாசிப்பேர் கூறினார்கள். இன உறவுகளைக் கையாள்வதில் ஒபாமாவின் அணுகுமுறை குறித்த இந்தக் கருத்துக்கள் அவர் வெள்ளை மாளிகையில் பதவியிலிருந்த கடைசி வருடத்தின்போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை அநேகமாக ஒத்தவையாக இருக்கின்றன.

ட்ரம்பினதும் ஒபாமாவினதும் இன உறவுகள் கையாளல் பற்றிய மதிப்பீடுகள் கணிசமானளவிற்கு கட்சிமனப்பான்மை அடிப்படையிலேயே வேறுபடுகிறது என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அதிகப்பெரும்பான்மையான ஜனநாயகக்கட்சிக்காரர்கள் (84 சதவீதம்) இன உறவுகளை ட்ரம்ப் படுமோசமாக்கிவிட்டாரென்று கூறினார்கள்

குடியரசுக்கட்சிக்காரர்கள் மத்தியில் கருத்துக்கள் கூடுதலானளவிற்குப் பிளவுபட்டவையாக இருக்கின்றன. சுமார் மூன்றில் ஒரு சதவீதமான குடியரசுக்கட்சிக்காரர்கள் இன உறவுகளை ட்ரம்ப் மேம்படுத்தியிருப்பதாகவும், 25 சதவீதமானவர்கள் அவர் இன உறவுகளை மேம்படுத்த முயற்சித்தார். ஆனால் முன்னேற்றங்களை ஏற்படுத்தத் தவறினார் என்றும் கூறுகிறார்கள். 19 சதவீதமான குடியரசுக்கட்சிக்காரர்கள் ட்ரம்ப் அந்த விவகாரத்தைக் கையாளவில்லை என்றும், 25 சதவீதமானவர்கள் இன உறவுகளை அவர் படுமோசமாக்கியிருக்கிறார் என்றும் கூறினார்கள்.

இனவெறி அமெரிக்காவில் மிகவும் ஆழமாக வேரூன்றிவிட்டது என்றும், தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால் அமெரிக்காவின் இனவெறி ஒரு பெரிய தொற்றுநோயாக இருக்கும் என்றும், புரூக்ளின் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரும் சமூகவியலாளருமான ரஷோன் றே ஜக் ஹீலியிடமும், டியோன் சியேஸியிடமும் கூறினார். ‘அமெரிக்காவில் ஒவ்வொருவரதும் வாழ்வில் இனவெறி குறிப்பிடத்தக்கதொரு பங்கை வகிக்காத ஒரு இடத்தை நாம் ஒருபோதும் அடைந்திருக்கவில்லை’.

-பி.கே.பாலசந்திரன்