ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

27 0

உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. 2-வது அலை தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. 2-வது அலை தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு, வீட்டுக்குள் பொதுமக்கள் முடக்கம், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சானிடைசர் திரவம் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் கொரோனா பரவுவது குறையாமல், உலகமே கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் உலகமெங்கும் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதித்து உள்ளது, 3¼ லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்றிருக்கிறது. இது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் 1 லட்சத்து 1,400-க்கும் மேற்பட்டோருக்கு தாக்கி இருப்பது பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

இதன் மூலம் உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகம் என்றும், குறைவான பரிசோதனைகள் உலகமெங்கும் நடந்துவருவதாகவும், பல கேஸ்கள் வெளியில் வருவதில்லை என்றும் ஜெனீவாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ரஷியா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அணி வகுத்து நிற்கின்றன.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும் என்று எச்சரித்தார். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை குறி வைத்து தாக்குவது பற்றி அவர் கவலையும் தெரிவித்தார்.

இதற்கிடையே ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் ‘ரோசியா 24’ வானொலிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், 2-வது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றினாலும்கூட, ஏறத்தாழ 100 நாட்களுக்கு பின்னர்தான் உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக கடந்த மார்ச் 11-ந் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பத்தில் இல்லை. பின்னர் அங்கு மெல்ல கால்பதித்த வைரஸ், இப்போது தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று மதிய நிலவரப்படி 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,972 ஆகவும் இருந்தது.