ஒரே தினம் நேரெதிர் உணர்வுகள்

511 0

விடுதலைப்புலிகளை பேரினவாத அரசுகள் பயங்கரவாதிகளாகவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவுமே கருதுகின்றன. அந்த அடிப்படையில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு உள்ளுர் மற்றும் சர்வதேச இராணுவ ஒருங்கிணைவு ஒன்றின் மூலம் ஆயுத ரீதியாக அடக்கப்பட்டார்கள். தோல்வியடையச் செய்யப்பட்டார்கள்.

பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டிருந்தாலும்கூட, இலங்கையை இரண்டாகப் பிரிப்பதற்காகவே அரச படைகளுடன் ஓர் ஆயுத மோதலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேசமும் அதனை ஒப்புக்கொண்டிருந்தது. இதனால்தான் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற அதேவேளை, பிரிவினைவாதிகள் என்றும் அழைத்தார்கள். குறிப்பிட்டார்கள்.

பயங்கரவாதிகள் என்றால் அவர்களுக்கு அரசியல் நோக்கம் இருக்க முடியாது. இலட்சியப் போக்கிற்கு அவர்களிடம் இடமில்லை பிரிவினைவாதிகள் என்றால் நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். ஓர் அரசியல் இலக்கு இருக்கும். இதனை எவரும் மறுக்க முடியாது. இரண்டாவது வகையினராகவே விடுதலைப்புலிகள் திகழ்ந்தார்கள். உயர்ந்த இலட்சியமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்களுடைய ஆயுதப் போராட்டம் வலிமை பெற்றிருந்தது. அரச படைகளைத் திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு வீரம் செறிந்ததாக இருந்தது.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக மௌனிக்கப்படும் வரையில் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. யுத்தத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் பிரிவினைவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் அல்லது யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்று பெருமை பேசப்பட்டது. பிளவுபட்டுக் கிடந்த நாடு ஒரே நாடாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. யுத்தத்தில் வெற்றி பெற்ற படையினர் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்ற வகையில் அன்று ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தொக்கம் அனைத்து அரச தரப்பினர் மட்டுமல்லாமல் சிங்கள எதிரணியினரும்கூட மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள்.

பூகோள ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த நாடு, 2009 ஆம் ஆண்டு அரசு அடைந்த இராணுவ வெற்றியின் மூலம் நிலவழியில் ஐக்கியப்படுத்தப்பட்டது. யுத்தம் காரணமாக பிளவுபட்டிருந்த இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் அடிக்கடி வலியுறுத்தினார்களே தவிர இதயசுத்தியுடன் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவே இல்லை. இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பதும் நாட்டு மக்களிடையே நல்லிணக்கம் என்பதும் வேறும் பேச்சளவிலேயே இருந்தது

ஐக்கியம் உருவாகவில்லை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, உயிர், உடைமைகள் மட்டுமல்லாமல் உடலுறுப்புக்களையும் இழந்து அளவிட முடியாத துயரத்தில் தோய்ந்திருந்த அந்த மக்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட நிகழ்வகள் பலவற்றில் ஆரம்ப நிகழ்வாக யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு, அவர்களது உயிர்த்தியாகத்திற்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த யுத்தத்தில் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்திருந்த போதிலும், இந்த நிகழ்வுகள் எதிலுமே, அவர்கள் நினைவுகூரப்படவில்லை. அவர்களுடைய இழப்புக்காக அஞ்சலி செலுத்தப்படவுமில்லை.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்த மே மாதம் 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினமாக, துயரம் தோய்ந்த நாளாகவே தமிழ் மக்கள் கருதினார்கள். கருதுகின்றார்கள். அந்த வகையிலேயே அதனை அவர்கள் நினைவகூருகின்றார்கள்.

ஆனால் அதே தினத்தை வெற்றி தினமாகக் கொண்டாடுகின்ற அரசு அந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கணக்கில் எடுக்கவே இல்லை. அங்கு பொதுமக்கள் எவரும் கொல்லப்பட்டதாக அவர்கள் காட்டிக் கொள்வதுமில்லை. அந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டார்கள். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்பதே ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல. அதற்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும்கூட இந்த நிலைப்பாடே கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் நாட்டில் இன ஐக்கியம் முன்னேற்றம் அடையவில்லை.

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் ஊடாகக்கூட இன ஐக்கியத்தை ஆட்சியாளர்களினால் வளர்க்க முடியவில்லை. அதற்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு என்றோர் அமைச்சு உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அமைச்சினால் சில பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் உண்மையான இன ஐக்கியத்தை உருவாக்க முடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலகம் ஒன்றும் உருவாக்கப்பட்டு நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வேலைத்திட்டங்களும்கூட இன ஐக்கியத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆற்றுகைக்கும் வழி சமைக்கத் தவறிவிட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தில் நிலைமைகள் ஓரளவு சீரடைந்திருந்தன. அதனை மறுக்க முடியாது. ஆனாலும், ஒரு யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்iலை. அத்தகைய வேலைத்திட்டங்களின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டு வலியுறுத்தப்பட்ட போதிலும், ஆட்சியாளர்கள் அது விடயத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை. இதனால் அந்த மக்கள் அரசு மீதும் அந்த அரசு சார்ந்த பேரினத்தின் மீதும் உளவியல் ரீதியாக நம்பிக்கை வைத்துச் செயலாற்றக்கூடிய சூழல் உருவாகவில்லை.

ஜனநாயகத்தில் கசப்பான பாடம் அத்துடன் அரசியல் ரீதியாக, இயல்பான ஓர் உளவியல் நிலையில் அரசு மீதும் பேரின ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைத்துச் செயற்பட முடியாத நிலைமையே தொடர்ந்தது. இன்னும் தொடர்கின்றது. இந்த நிலைமையில்தான் பதினொரு வருடங்கள் கழிந்திருக்கின்றன.

ஆறு வருடங்களுக்கு முன்னர் இராணுவ மேலாதிக்கப் போக்கில் ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்களே இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றார்கள். அன்று நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியாக இருந்தவர் இன்று பிரதமராகியிருக்கின்றார். அன்றை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை
அலங்கரித்தவர் இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த அரசியல் மாற்றத்திற்கான தேர்தலில் சிங்கள பௌத்த மக்கள் ஒன்று திரண்டு தங்களுடைய சக்தியை வெளிப்படுத்தி உள்ளார்கள். பெரும்பான்மையினராகிய அந்த மக்களுடைய ஆதரவு மட்டுமே இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்குப் போதுமானது என்ற கசப்பான பாடம் போதிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனநாயகம் என்பது சிறுபான்மையினருiடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை கோட்பாடுகளைக் கொண்டது என்று கூறுவார்கள். ஆனால் இலங்கையின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலானது, ஜனநாயகத்தின் சக்தியாகிய பெரும்பான்மையைப் பயன்படுத்தி சிறுபான்மையின மக்களை ஒடுக்க முடியும் என்பதை நிலைநிறுத்தி இருக்கின்றது.

ஏனெனில் சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மையான வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாயா ராஜபக்ஷ தன்னை அந்தப் பதவிக்குத் தெரிவு செய்த சிங்கள பௌத்த மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அழுத்திக் கூறியுள்ளார். அது மட்டுமல்ல. பெரும்பான்மை இன மக்களுக்கு முதன்மை நிலையும், முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்பதை சிறுபான்மை இன மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுச் செயற்பட வேண்டும் என்பதையும் அவர் அதிகாரபூர்வமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

பேரின அரசியல் போக்கைத் தொடர்வது மட்டுமல்ல. யுத்தத்தில் விடுதலைப்புலிகளை மௌனிக்கச் செய்ததன் மூலம் கிடைத்த வெற்றிவாத அரசியலை விட்ட இடத்தில் இருந்து தொடர்வதற்கும் அவர் முற்பட்டிருக்கின்றார்.

சிறுபான்மை இன மக்களின் இருப்பை எந்த வகையிலும் அங்கீகரிக்காத போக்கே வெற்றிவாத அரசியல் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்க காலத்தில் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது. ராஜபக்ஷக்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அவர்களுடைய அமைச்சரவையில் சிறுபான்மை இன அரசியல் கட்சிகளுக்கு காலாதி காலமாக அளிக்கப்பட்டு வந்த அளவில் இடம் அளிக்கப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம்களான எவருக்குமே அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. தமிழர்களைப் பொறுத்தமட்டில், மலையகக் கட்சிகளுக்கும் வடக்கில் ஈபிடிபி கட்சிக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது.

அப்பட்டமான அடக்குமுறை ஒற்றுமையானதொரு சமூகம், வளமானதொரு தேசம் என்ற மகுட வாசகத்துடன் இன ஐக்கியத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் ஆட்சி மாற்றத்தையடுத்து கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.

பல்லின சமூகங்களிடையேயும் பல்வேறு மதங்களிடையேயும் விட்டுக் கொடுப்புடன் கூடிய பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசியலில் பல்லினத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பல்லினத்தவர்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மறுக்கப்படக் கூடாது. அப்போதுதான் நாட்டில் உண்மையான ஐக்கியமும் நல்லிணக்கமும் ஏற்பட முடியும்.

ஆனால் ஆறு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்ஷக்கள் சிங்கள பௌத்தத்திற்கும், இராணுவத்திற்கும் முன்னுரிமையையும் முதன்மை நிலையையும் அளிப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற 11 ஆம் ஆண்டு நினைவுதின வைபவத்தின்போது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது.. வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் அந்தத் தினத்தை ஒரு துன்பியல் தினமாக துயரத்துடன் அனுட்டித்தார்கள்.

ஆனால் மே 19 ஆம் திகதி அந்த தினத்தை நாட்டின் தென்பகுதி மக்களும் அரசும் வெற்றி தினமாகக் கொண்டாடினார்கள். இந்த ஆண்டு மட்டுமல்ல. கடந்த 11 ஆண்டுகளாக இதுவே நடைபெற்று வருகின்றது என்பது உண்மைதான். ஆனால் இந்த வருடம் வழமையைவிட நாடு உணர்வு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இந்த தினத்தில் ஆழமாகப் பிளவுபட்டுக் கிடந்ததையே காண முடிந்தது.

வடக்கு கிழக்கில் மே 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் துயர தினமாக அனுட்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் அரசியல்வாதிகள் அந்த நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் இருந்தும், அந்த நிகழ்வுகளில் பங்கேற்பதில் இருந்தும் பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டிருந்தார்கள். அதற்காக கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்புச் சட்டத்தைத் துணைக்குக் கையில் எடுத்துக் கொண்டார்கள். அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை என்று சுட்டிக்காட்டியபோது, அரசியல்வாதிகள் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்பது மேலிடத்து உத்தரவு என்று பொலிசாரினால் பதிலளிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரே தினம் நேரெதிர் உணர்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தடைகள் ஏற்படுத்தப்படுவது வழமையான நடவடிக்கையாகும். ஆனாலும் இராணுவ மேலாதிக்கச் சிந்தனைப் போக்கைக் கொண்ட ஜனாதிபதி கோத்தாபாயாவின் ஆட்சியில் மே 18 ஆம் திகதி பொலிசாரினால் கைக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இனவாத சிந்தனையைத் தாண்டி, அப்பட்டமான அடக்குமுறைப் போக்கையே வெளிப்படுத்தி இருந்தன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் என்பது மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், இனப்படுகொலைகள் என்பவற்றுக்கு நீதி கோருகின்ற ஒரு தினமாகும். இது வடக்கு கிழக்குப் பிரதேசம் மட்டுமல்ல. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களினதும் உள்ளக் கிடக்கையாகும். முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு நீதி வேண்டும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற அவர்களின் நிவாரண நீதிக்கான மன ஏக்கத்தையும், இதய தாகத்தையும் வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்ப தினமாகும்.

அந்த வகையிலேயே 2020 ஆம் ஆண்டும் மே 18 ஆம் திகதியைத் தமிழ் மக்கள் கெடுபிடிகளுக்கு மத்தியில் அனுட்டித்தார்கள். ஆனால் இந்த தினத்தை வெற்றி தினமாகக் குறித்துக் கொண்டாடுகின்ற அரச நிகழ்வு 19 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்பட்டது. ஒரே நாட்டில் முக்கியமான ஒரு தினம் நேரெதிர் உணர்வு போக்கில் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமை இன ஐக்கியத்தையோ அல்லது நாட்டில் ஒற்றுமையையோ நல்லிணக்கத்தையோ வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் வழிசமைக்காது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் அரச படைகள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள், போர்க்குற்றச் செயல்களிலும் இன அழிப்புச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் சர்வதேசமும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளது. இதனை அரச படைகள் மறுத்திருக்கின்றன. அரசாங்கமும் அதனை அடியோடு மறுத்திருக்கின்றது. நிராகரித்திருக்கின்றது.

ஆனால் வழமையான நிராகரிப்பையும் கடந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் அரச படைகள் அடைந்த வெற்றியை வெற்றி தினமாகக் கொண்டாடிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இராணுவத்தின் மீது அடிப்படையற்ற விதத்தில் குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது என்பதை அழுத்தி உரைத்திருக்கின்றார். அது மட்டுமல்ல. எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமானால், அந்த நிறுவனத்தில் இருந்தும் அமைப்பில் இருந்தும் இலங்கை விலகிக்கொள்ளும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் உரையாற்றிய அவர் திடீரென ஆங்கில மொழியில் இந்த விடயத்தைக் கூறியிருக்கின்றார். அந்த வகையில் இந்த அறிவித்தல் சாதாரண அரசியல் ரீதியான அறிவித்தல் அல்ல. இது ஆழமான கருத்துணர்வைக் கொண்ட அதிகாரபூர்வமானதொன்று என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது.

ஜனநாயகத்தில் இருந்து நழுவுகின்றதா….? இந்த சந்தர்ப்பத்தில் பதினொரு ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் துயரத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டில் இருந்து அரசு தவறியிருக்கின்றது. தொடர்ச்சியாக அதனைத் தவிர்த்துப் புறந்தள்ளி வருகின்றது என்று மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய யஸ்மின் சூகா, நவநீதம் பிள்ளை ஆகியோரும் சுட்டிக்காட்டி, அந்தப் பொறுப்பை அரசு நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டியுள்ளார்கள். கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயும் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகளுக்கும் அவர்களின் நிலைப்பாட்டிற்கும் பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவின் இராணுவ வெற்றிதினக் கொண்டாட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்று அமைந்திருக்கின்றது என கருத முடிகின்றது.

அதேவேளை, இராணுவத்தின் உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஐநா மன்றம், ஐநா மனித உரிமைகள் பேரவை என்பவற்றிற்கும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தாபாய ரஜபக்ஷ இதனைக் கூறியிருக்கின்றார் என்பதையும் அனுமானிக்க முடிகின்றது.

அதேவேளை, இந்த வெற்றி தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி கழுத்தறுப்பேன் என்ற ரீதியில் சைகை மூலமாக அச்சுறுத்தியதாக மனித உரிமை மீறல் ரீதியில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்தத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாகக் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டிருக்கின்றார்.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் அவர் உட்பட 177 இராணுவத்தினருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. ஐந்து பேர் மேஜர் ஜெனரலாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன் கேணல்களாகவும், 69 பேர் மேஜர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ இராணுவமய சிந்தனை கொண்ட ஆட்சிப் போக்கைக் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் அவர் இலங்கையின் அதி உச்ச அதிகார பலம் கொண்ட பதவியாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தனது ஆட்சிப் போக்கில் மிகவும் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தி இருப்பதையே காண முடிகின்றது.

ஜனநாயக விழுமியங்களுக்கு ஆசியாவில் பெயர் பெற்றிருக்கின்ற இலங்கை படிப்படியாக இராணுவ மயம் சார்ந்த ஆட்சியில் நழுவி சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே அவருடைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

பி.மாணிக்கவாசகம்