மட்டு வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் போராட்டம்!

278 0

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் முன்னெடுத்த போராட்டம் பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

இன்று (21) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடமைக்குவந்த சுகாதார உதவியாளர்கள் கடமை நேரத்திற்கு பின்னராக வருகைதந்ததன் காரணமாக கையொப்பம் இடும் புத்தகம் முடிவுறுத்தப்பட்ட நிலையில் சுகாதார உதவியாளர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

தாங்கள் பொலனறுவையில் இருந்து வருகை தருகின்றமை காரணமாகவே நேரம் கடந்துவருவதாகவும் அதனை கருத்தில்கொள்ளாமல் வைத்தியசாலை நிர்வாகம் நடந்துகொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எனினும் பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நேரம் கடந்து கடமைக்கு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் க.கலாரஞ்சினி தெரிவித்தார்.

எனினும் அதிகளவானோர் பொலனறுவையில் இருந்து வருகைதருவதன் காரணமாக போக்குவரத்து பேருந்துகள் பற்றாக்குறையாகவுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில் ஏனைய போக்குவரத்து சேவைகளும் நடைபெறாத நிலையில் உரிய நேரத்திற்கு வருகைதர முடியாத நிலையுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கவனத்தில்கொண்ட பணிப்பாளர் இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்புகொண்டு பேசி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் இனிவரும் காலங்களில் நேரத்திற்கு சமுகமளிக்குமாறும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.