யாழில் உயர் அழுத்த மின் தாக்கி ஒருவர் படுகாயம்!

343 0

யாழ்ப்பாணத்தில் உயர் அழுத்த மின் தாக்கம் காரணமாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் இன்று காலை மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா ரெலிக்கொம் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிர்மாணப் பணிகளை பகுதியளவாக மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வீதியோரமாக கம்பங்களை நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்படி இன்று காலை காங்கேசன்துறை வீதி உப்புமடத்தடியில் வீதியோரமாக கம்பத்தினை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பம் நடுவதற்கான குழி தேண்டப்பட்ட நிலையில் பாரம் தூக்கும் இயந்திரம் ஊடாக கம்பத்தினை நாட்டுவதற்கு முற்பட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த உயர் மின்சாரம் கடத்தப்படும் கம்பியில் கம்பம் தொடுகையுற்றதால் பாரம்தூக்கும் இயந்திரத்திற்கு மின் கடத்தப்பட்டுள்ளது.

இதனால் பாரம்தூக்கும் இயந்திரத்தை இயக்கியவரை மின்சாரம் தாக்கியுள்ளது. குறித்த விபத்தில் உடல் முழுவதும் எரிந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கம்பம் நாட்டும் பணிகள் உரிய முறையில் மின்சாரசபைக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்டதாலேயே மேற்படி விபத்துச் சம்பவம் நடந்துள்ளதாக யாழ்.மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.