நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

264 0

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் புதிய பரிசோதனை திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் “நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்” என்ற திட்டத்தை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.
சென்னையில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்துவதுடன், சளி இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்றும் சோதனை செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் சிறப்பு கவனம் எடுத்து சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்படும். இந்த பணிக்காக கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இருப்பார்கள்’ என்றார்.