செவ்வாய் கிரகத்திற்கு பயணமாகும் ‘ஹோப்’ விண்கலம்

267 0

செவ்வாய் கிரக பயணத்திற்காக அமீரக தொழில்நுட்பத்தில் உருவான `ஹோப்’ விண்கலம் வருகிற ஜூலை 15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலின்படி கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அமீரக விண்வெளி திட்டத்தில் செவ்வாய்கிரக பயணத்திட்டம் முக்கியமான ஒன்றாகும். அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஹோப் விண்கலம்

இதற்கான முன் தயாரிப்பு பணிகளை துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த செவ்வாய் கிரக பயணத்திற்காக நம்பிக்கை (அரபியில் அல் அமல்) என்ற பொருளில் `ஹோப்’ என்ற பெயரில் விண்கலம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் சார்பில் 150 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் `ஹோப்’ விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த பயணத்திட்டத்திற்காக முதல் முறையாக முற்றிலும் அமீரக தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விண்கலம் இது என்பது பெருமைக்குரியது.

இந்த விண்கலம் மனிதர்கள் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த விண்கலத்தில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விண்வெளியில் 600 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும் பேட்டரிகளும் பொருத்தப்பட்டுள்ளதால் மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதன் அளவு சிறிய ரக கார் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறுங்கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் முற்றிலும் இலகு ரக அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு 1,000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப முடியும்.

பூமியில் இருந்து ஹோப் விண்கலம் 60 கோடி கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் பயணமாகும்.

ஹோப் விண்கலம்

அதுவே விண்வெளியில் செல்லும்போது மனிதர்களால் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு, மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பிறகு செவ்வாய்கிரகத்திற்கு மிக அருகில் 22 ஆயிரம் கிலோ மீட்டர் அளவு சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 14 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாக குறைக்கப்படும். எனவே பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 200 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது 2020-ம் ஆண்டு தொடங்கும் பயணம் 2021-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றடைகிறது.

ஹோப் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு அண்மையில் ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஹோப் விண்கலம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு `ஹெச் 11 ஏ’ என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி அமீரக நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏவும் போது இந்த விண்கலம் 7 முதல் 9 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடையும். ஒருவேளை தவிர்க்க முடியாத காலநிலை அல்லது சூழ்நிலை ஏற்பட்டால் வருகிற ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி மாற்று தேதியாக அறிவிக்கப்படும். எனினும் குறிப்பிட்ட தேதியில் விண்ணில் ஏவப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது