பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு

248 0

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உட்பட பொது விதியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரண தொகையான ரூ.2000 வழங்கப்படும்.

தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.