கொரோனாவை கொன்றுகுவிக்க இது போதும் – புதுவித மாஸ்க் உருவாக்கும் ஹூவாமி

315 0

ஹூவாமி நிறுவனம் உருவாக்கி வரும் புதுவித மாஸ்க்கை கொண்டு கொரோனாவை கொன்றுகுவிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமேஸ்பிட் பிராண்டிங் சாதனங்களை உருவாக்கி வரும் ஹூவாமி நிறுவனம் தற்சமயம் புதுவித முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஏரி எனும் பெயரில் உருவாகும் புதுவித முகக்கவசங்களில் புற ஊதா விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மின்சக்தி மூலம் இணைத்தால், கிருமிகளை நிமிடங்களில் கொன்றுகுவிக்க முடியும்.
கழற்றக்கூடிய ஃபில்ட்டர்களை பயன்படுத்தும் இந்த முகக்கவசங்கள் என்95 தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. இதுசார்ந்த பணிகள் முழுமையாக வெற்றிபெறும் பட்சத்தில் இவை தற்போதைய என்95 தர முகக்கவசங்களை விட நீண்ட நாள் உழைக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்ட உபகரணங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஏரி முகக்கவசம் ப்ரோடோடைப்
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஏரி எனும் பெயரில் உருவாகி வரும் புதுவித முகக்கவசம் அதிநவீன வடிவமைப்பு கொண்டிருப்பதோடு கழற்றக்கூடிய ஃபில்ட்டர்களை கொண்டிருக்கின்றன. இது புற ஊதா மின்விளக்குகள் அடங்கிய பிளாஸ்டிக் முகக்கவசம் ஆகும்.
யுஎஸ்பி போர்ட் மூலம் கனெக்ட் ஆகும் போது, புற ஊதா மின்விளக்குகள் கிருமிகளை பத்தே நிமிடங்களில் அழித்துவிடும். இவ்வாறு செய்யும் போது முகக்கவசத்தின் உள்புறம் முழுமையாக சுத்தமாகி விடும். இதன் வெளிப்புறங்களில் மட்டும் பயனர்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஹூவாமி நிறுவனம் புதிய முகக்கவசத்தை சீன அரசாங்கத்தின் மூத்த மருத்துவ ஆலோசகருடன் சேர்ந்து உருவாக்கி வருகிறது. தற்போதைய விவரங்களின் படி புதுவித முகக்கவசத்தின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.