யேர்மனி டுசுல்டோர்வ் நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வு.

981 0

18.5.2020 திங்கட்கிழமை யேர்மனி டுசுல்டோர்வ்; நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் உச்ச நாளாகிய மே18 இன் நினைவேந்தல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு வழமைபோல் யேர்மனியின் மத்தியமாகாண பாராளுமண்றத்திற்கு முன்பாக நடைபெற்றது.

கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் அதிகரித்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அதற்கான யேர்மனிய சட்ட ஒழுங்குகளைப் பேணியபடி நூற்றுக்கும் அதிகமான மக்கள் உணர்வுபூர்வமாக இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தங்கள் உறவுகளுக்கு மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதன் பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. மக்கள் கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு மலர்வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தினார்கள். பின்பு அனைத்துலகத்திலும் கொரோனா கொள்ளை நோயினால் சாவடைந்த மக்கள் நினைவுகொள்ளப்பட்டு பின்பு அகவணக்கம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கவிதை, சிறப்புப் பேச்சு என்பன இடம்பெற்றது. யேர்மனியில் உள்ள இடதுசாரிக் கட்சியின் பாராளுமண்றப் பேச்சாளர் சிறப்புரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. பின்பு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. அதைனைத் தொடர்ந்து மே மாத இனப்படுகொலை நாட்களில் மக்கள் உண்ண உணவின்றி அவதிப்பட்ட நிலையை நினைவுபடுத்தி வருகைதந்திருந்த மக்கள் கஞ்சி அருந்தி கலைந்து சென்றனர்.