கேட்கிறதா எங்கள் குரல்கள்……தெரிகிறதா எங்கள் முகங்கள்….சிகாணுஜா சதீஸ்குமார்

617 0

இனிய தமிழ் சொந்தங்களே,
கேட்கிறதா எங்கள் குரல்கள்…..

.தெரிகிறதா எங்கள் முகங்கள் ……

மறந்திருப்பீர்களா எங்களை…..ஓடிவந்து உங்களை எல்லாம் ஒருமுறை கட்டியணைத்து கதறியழவேண்டுமென்று துடிக்கிறோம் உறவுகளே…முடியவில்லை. கேட்கிறதா எங்கள் குரல்கள்…..தெரிகிறதா எங்கள் முகங்கள்……தொந்தரவு செய்கிறோமா….மன்னித்து விடுங்கள்…….உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார் உண்டு உறவுகளே…வேறு யார் உண்டு.

தெரியும் எங்களுக்கு, கொரோனா நுண்கிருமி நோயானது உங்கள் அன்றாட வாழ்வியக்கத்தினை முடக்கி உள்ளது.
தெரியும் எங்களுக்கு……இருந்தாலும் உங்களை தொந்தரவு செய்கின்றோம்…..மன்னித்துவிடுங்கள்…..

உங்களை விட்டால் வேறு யாரிடம்…..உறவுகளே போக….உங்களிடம் நாங்கள் வந்திருப்பது எங்களுக்காய் இல்லை உறவுகளே சத்தியமாய் எங்களுக்காய் இல்லை……உங்களுக்காக வந்திருக்கிறோம், உங்கள் பிள்ளைகளுக்காக வந்திருக்கிறோம் நம்புங்கள் எங்களுக்காய் இல்லை……
அணுத்துகள்களாய் காற்றில் கரைந்து, அழுது அழுது அலைந்துலையும் எங்கள் முகங்களை உங்கள் மனக்கண்களில் பாருங்கள்….எங்களை நம்புவீர்கள்…….இன்னுமா தெரியவில்லை சொந்தங்களே…. பதினொரு ஆண்டுக்கு முன்பு பொஸ்பரஸ் குண்டுகளாலும் கிளாஸ்டர் கணைகளாலும் எலும்புகள்கூட மிச்சமின்றி முள்ளிவாய்காலில் எரிந்து செத்தவர்கள் நாங்கள். கேட்கிறதா எங்கள் குரல்கள்….தெரிகிறதா எங்கள் முகங்கள்…..

ஆகையால் உறவுகளே நம்புங்கள்….அழுவது எங்களுக்காய் இல்லை உங்களுக்காய்…..உங்கள் பிள்ளைகளுக்காய்……
முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களில் எங்கள் உடல்களில் தீப்பற்றி எரிய ஓடி…ஓடி…ஓலமிட்டுச் செத்தவர்கள் நாங்கள்….இன்னும் அழுகிறோம்…..கேட்கிறதா எங்கள் குரல்கள்….தெரிகிறதா எங்கள் முகங்கள்…..

வானமும் பூமியும் கடலும் தவிர எந்த சாட்சிகளுமற்ற வெளிகளில் சிதறித்சிதறி நாங்கள் செத்தபோது பனியிலும் குளிரிலும் நீங்கள் வீதிகளில் நாட்கணக்காக சென்றீர்கள்….மண்டியிட்டு அழுதீர்கள்…தெரியும் உறவுகளே தெரியும்….ஆனால் இன்று என்னவாயிற்று….?மே பதினெட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில்கூடவா எங்களைக்காண வரமாட்டீர்கள்….

காற்றில் அலைந்தபடி உங்களுக்காய் காத்திருக்கும் எங்கள் ஆத்மாக்களின் கதறல்கள் உங்களுக்கு கேட்பதில்லையா உறவுகளே….உலகம் கேவலம் அதன் கால்களில் விழுந்தழுது களைத்துவிட்டோம் .எல்லாம் அறிந்திருந்தும் அறியாதுபோல் நடிப்பவர்கள். எங்களில் பலரின் சாவுகள் வாய்திறந்து சொல்லமுடியாத கொடூரங்கள்….செத்தபின்பும் எங்களைச் சாகடிகடிக்கும் நினைவு நரகங்கள்…..எப்படிச்சொல்ல….வேட்டைநாய்கள் வெறிகொண்டு எங்களின் உடல்களை தின்றன….உடல்கள் கிடக்க உள்ளங்கள் எரிந்தன.

செத்தபிறகும் பிணங்களை புணர்ந்த கொடுமைகள்….உலகில் எங்கும் நடந்திரா அவலங்கள்….எல்லாம் அறிந்திருந்தும் இந்த உலகம் எங்களை வஞ்சித்தது. ஆனால் நாங்கள் அதற்காய் அழவுமில்லை.நாங்கள் அழுவதெல்லாம் உங்களை நினைத்துத்தான் உறவுகளே….எங்கள் நினைவு நாட்களில் கூடவா நீங்கள் இணைவதில்லை……எங்களின் சாவுகள் கூடவா உங்களை ஒன்றுசேர்க்கவில்லை…..மானமும் சுயமரியாதையும் கொண்ட எங்களின் சமூகவாழ்வினை அழித்தொழித்தவர்கள் யார் உறவுகளே….யார்?எங்கள் பண்பாடுகளை சிதைத்தவர்கள் யார்…உங்களின் ஒற்றுமைகளை குலைத்தவர்கள் யார்….ஒன்றுக்கும் உதவா முகம் தெரியா எழுத்தாளர்களா….அருவருப்புக்குரிய சில ஊடகங்களா…..எவை உறவுகளே எவை உங்களுக்குத்தடை….

பெரும்வலிகளைச் சுமந்தபடி உளவியல் தாக்கங்களுக்கு மத்தியிலும் இன்னும் விடுதலைப்பணியாற்றும் ஒருசிலரைக்கூட இந்த நயவஞ்சகர்கள் விடுவதில்லையா…..ஏன்தான் இவர்கள் இப்படி ஆனார்களோ…..முகம் தெரியா இந்த வஞ்சகர்களின் எழுத்துக்களா உங்களை குலைக்கின்றன…..எங்களின் சாவுகளைக்காட்டிலும் இவர்களின் எழுத்துக்களா உங்களை மாற்றிவிடும்….இல்லை உறவுகளே எங்களுக்குத்தெரியும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு எங்களின் நினைவுகளோடு இணையுங்கள்…முள்ளிவாய்கால் நினைவு நாளில் அழவும் மாவீரர்களின் எழுச்சிநாளில் எழவும் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் உறவுகளே.

பதினொரு ஆண்டுகள் கடந்தாவது மே.18இல் ஒன்று சேருங்கள்……எங்கள் சாவுகளை அர்த்தமானதாக்குங்கள்……எமது பிள்ளைகளுக்கு அவர்களின் அடையாளங்களை எங்கள் நினைவுநாட்களில் பதியவையுங்கள்.பதினொரு ஆண்டுகள் அழுது அழுது அலைந்து திரியும் எங்களின் ஆத்மாக்களை இனியாவது அமைதிப்படுத்துவீர்களா சொந்தங்களே….ஆயிர ஆயிரமாய் நீங்கள் அணிதிரள முடியா முடக்கம் என்பதை நாம் அறிவோம். எங்களின் நினைவுகளோடு மே.18இல் கூடுமானவரையில் பாதுகாப்பு இடைவெளிகளோடு ஒன்றிணையுங்கள் உறவுகளே. ஒன்றுகூட முடியாதவர்கள் உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் விளக்கேற்றுங்கள்.

ஏற்றும் வெளிச்ச ஒளியில் நிச்சயம் எங்கள் முகங்கள் காண்பீர். வானவெளிகளில் அந்தரிக்கும் எங்களின் உயிர்காற்றை உறங்கவையுங்கள்….அதுவரை அழுதபடி காத்திருப்போம்……காத்திருப்போம்…..அணுத்துகள்களாய் காற்றில் கரைந்து அழுது அழுது காத்திருக்கிறோம்…..உங்கள் எல்லோரது வரவுக்குமாய்………
_இவ்வண்ணம் உங்களின் உயிர்ப்பின் உறவுகள்.

நன்றி.
திருநிலவன்