போராட்டமின்றி மாற்றமில்லை!

806 0

ஈழத்தமிழினம் தந்தை செல்வாவின் காலத்தில் அகிம்சை வழியில் போராடியது. அகிம்சை போராட்டம் அடக்கப்பட்டு. தமிழினம் அழிக்கப்பட்டது.

“உனது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறான்” என்றார் புரட்சியாளர் சேகுவேரா. உண்மைதான் . தமிழினத்தை ஆயுத போராட்டத்திற்குள் தள்ளியது சிறிலங்கா பௌத்த பேரினவாதம்.

சுருங்கக் கூறின் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ”ஜெயவர்தனா உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை இருந்திக்காது” எனக் கூறினார்.

எனவே, ஆயுதப் போராட்டம் தமிழினத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டது. என்றுமே தமிழினம் விரும்பிப் போரை ஏற்றுக்கொண்டதில்லை .

சிறிலங்கா அரச இயந்திரமே அடக்குமுறையை பல் வேறு வடிவத்தில் மேற்கொண்டதால் தமிழ் மக்களின் தெரிவு ஆயுதங்களை கையிலெடுப்பதை தவிர வேறு வழி இல்லை.

மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “தக்கன பிழைத்தல்” கோட்பாடே அங்கு நடந்தேறியது.

தமிழினம் முப்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக தன்னை பாதுகாக்க தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்து அற்புதமான தலைவனின் வழிகாட்டலில் வாழ்வாங்கு வாழ்ந்தது.

ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய பண்புகளுடன் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகித்து . சோழ மன்னின் இராட்சியத்தியத்தை மீண்டும் ஈழத்தில் நிலைநாட்டினார் தமிழினத்தலைவன் பிரபாகரன்.

ஆக்கிரமிப்பும் சுரண்டல்களையும் கொண்ட உலக ஏகாதிபத்திய அரசுகள் தமிழீழ நிழல் அரசை பார்த்து பிரமித்தது. பிரபாகரனின் பிரமாண்டத்தை போரில் மட்டுமல்ல நாட்டை நிர்வகிக்கும் அழகிலும் கண்டு பிரமித்தது. தாம் எல்லாம் ஒர் அரசின் தலைவர்கள் அதிலும் குறித்த ஆண்டுகளுக்கு மட்டுமே . பிரபாகரனோ ஓர் இனத்தின் தலைவனாக என்றும் நிலைக்கப்போகிறான் என அஞ்சி சிறிலங்கா பேரினவாத அரசுடன் கைகோர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்தொழித்தது.

யூதர்கள் வாழ்வு தமிழினத்திற்கு ஒரு வழிகாட்டல் . உலகெங்கும் யூதர்கள் சிதறுண்டு வாழ்ந்தாலும் . தமது தாயகம் நோக்கிய பயணத்தை கைவிடாது இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள். இன்று உலமயமாக்கலில் யூதர்கள் உலகெங்கும் வாழ்ந்தாலும் அவர்களது தாய்நாடு இஸ்ரேலாக உள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் தாயக தேசம் என்று எதைச் சொல்வோம்?

உலகில் வாழும் சகல உயிரினங்களும் போராடித் தான் தம்மைத் தற்காத்திருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் போராடத்தான் வேண்டும். ”போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.” என தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் சிந்தனையை சிரமேற்கொண்டு செயற்படுவோம்.

போராடியே வாழக் கற்றுக்கொண்ட மக்களுக்குக்கு இதை புரிந்து கொள்வதில் இம்மியும் தயக்கம் இருக்காது. போராட்டமின்றி வாழ்க்கையில்லை. போராடுவதை தவிர வேறு வழியும் இல்லை.