எல்லாம் போச்சுது என்றிருந்தால் – நாளை மீதமாய் இருக்கும் எம் மூச்சும் இருக்காது.-ச.பா.நிர்மானுசன்

475 0

எல்லாம் போச்சுது என்றிருந்தால் – நாளை
மீதமாய் இருக்கும் எம் முச்சும் இருக்காது.
வாழ வேண்டுமா? போராடு.
தன்னமானமும், கௌரவமும்
தானாய் வருவதல்ல – அவை
உன் பலம் அழைத்து வருவது.
சங்கிலியன் சிலை தொடக்கம்,
சங்கரின் நினைவோடு மலர்ந்த
கல்லறைகள் அனைத்தும்
அழிக்கப்பட்டாயிற்று.
கண்ணீர் மல்கி கண்டது என்ன?
கையேந்தி வாழ்வதில் என்ன பயன்?
இரந்து கேட்பதற்கு நாமொன்றும்
இழிந்தவர் அல்ல.


தோற்றுப் போனவர் எல்லாம்
கௌரவத்தை கைவிட்டு
துவண்டு போயிருந்தால்
நேற்றோடு முடிந்திருக்கும்
நிமிர்ந்தவர் வரலாறு.
எழுவானமாய் பூத்திருக்கும்
சுதந்திர தேசங்களின் வரலாற்றை
ஒருதரம் புரட்டிப்பார்.


எழுநூறு வருடகாலமாய், விடுதலைபெறும் வரை
சளைக்காமல் போராடிய அயர்லாந்து.
எட்டு லட்சம் மக்கள் மடிந்த பின்னும்
உரிமைக்காய் சமராடும் ருவாண்டா.
இனப்படுகொலைக்கு இரையானபோதும்
மலர்ந்துள்ள தேசமாய் கொசோவோ.


ஏன்?
எல்லைப் புறத்தில் கிழக்குத் தீமோர்.
இன்று,
அரவணைக்க யாருமில்லாமல்
நாமிருக்கலாம் – அதற்காய்
நாளையையுமா கைவிடுவது?
அது – எம்மால் எமக்காக
நிர்ணயிக்கப்பட வேண்டியது.


பலமிருந்தால் நிலமும் வரும்,
நீதியும் கிடைக்கும். – ஏன்
நாம் அழையாமலே
உறவுகள் எனக்கூறி
ஆயிரம்பேர் வரக்கூடும்.


நிலையானதென்றதொன்று இவ்வுலகிலில்லை.
வரலாறு என்றும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை.
வல்லவனே வையகம் ஆழ்வான்.
வலிமையே உரிமையத் தரும்.
தமிழா!


காலம் முழுக்க காலில் மிதிபடும்
துரும்பைப் போல வாழப்போகிறாயா?
துருப்பிடித்தாலும் அது இரும்பு இரும்புதான்.
அது உடையாது, உடையவும் கூடாது.
தமிழா!


வாழ வேண்டும் என்றால்
உன்வம்சம் உனக்கு பொக்கிசமாய்
வழங்கிய வீரத்தை வீணாக்காதே.
விரைந்திடு!!!


களம் எதுவானாலும், உன் கையே ஓங்கட்டும்.
உண்மையும், எங்கள் ஊரின் நிலைமையும்
எங்கும் ஒலிக்கட்டும்.
சமர்க்களமா இல்லை சமாதனக் களமா
என்பது அல்ல இன்றைய கேள்வி.
எந்தக் களமாயினும்
நாம் வெல்ல வேண்டும்
என்பதைக் குறிக்கோளாய் கொள்.


சாத்வீகமா சண்டையா என்பது
உன் பணிவில் வருவதல்ல – அது
பலத்தில் வருவது.
இது தர்மப் போர் மட்டுமல்ல – தர்மத்தை
நிலைநிறுத்துவதற்கான போராட்டம்.
சத்தியத்தை உறுதிப்படுத்துவதற்கான
ஒரு நெருப்பாற்று நீச்சல்.


அழிந்தோம் என்பது இறந்த காலமே.
எழுவோம் என்பது நிகழ்காலமாய் இருக்கட்டும்.
சாம்பலில் இருந்து
உயிர்த்தெழும் பறவைக்கு
உதாரணமாய் பீனிக்ஸ் இருக்கட்டும்.


மனிதர்களுக்கு உதாரணமாய்
தமிழன் மாறட்டும்.
மே 18 அஸ்தமனத்தின் நாளல்ல – அது
புதிய தொடக்கமொன்றிற்கான அத்திபாரம்.
மடிந்த எம் மக்களை மனதிலிருத்தி
தமிழர் வாழ்வுக்காய் வீழ்ந்தவர் மீதொரு சத்தியம் செய்து
புதிய சகாப்தம் படைக்க புறப்படுவோம்.

கவிதை: ச.பா.நிர்மானுசன்